Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 நவம்பர் (ஹி.ச.)
கேரளா மற்றும் கர்நாடக மாநில ஆம்னி பேருந்துகள் 'ஆல் இந்தியா பர்மிட்' முறையில் பிற மாநில வாகனங்களுக்கு உரிமம் பெற்று தமிழ்நாட்டிற்குள் ஆம்னி பேருந்துகளை இயக்கினாலும் தனிப்பட்ட முறையில் தமிழ்நாடு அரசுக்கு வரி செலுத்த வேண்டும் என்ற முடிவை தமிழக அரசு எடுத்ததன் காரணமாக கேரள அரசும், கர்நாடக அரசும் அதேபோன்ற முடிவை எடுத்து தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆம்னி பேருந்துகளுக்கு கூடுதல் வரி விதித்துள்ளனர்.
அதன்படி கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டுமெனில் மூன்று மாதத்திற்கு கிட்டத்தட்ட நான்கு லட்சம் ரூபாய் வரி செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களில் உள்ள ஆம்னி பேருந்துகள் சங்கத்தினரும் ஒட்டுமொத்தமாக ஆம்னி பேருந்துகளை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக பேருந்துகளை இயக்காமல் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளனர்.
இன்று (நவ 10) முதல் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கிடையே ஆம்னி பேருந்துகள் இயங்காது என ஏற்கனவே ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த அறிவிப்பு இன்று நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் மூன்று மாநிலங்களிலும் பயணிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று (நவ 10) பிற்பகல் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தை அழைத்து இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்காக ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடம் கலந்து பேசி ஆம்னி பேருந்துகள் பல்வேறு மாநிலங்களுக்கு இடையே இயக்குவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b