Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 10 நவம்பர் (ஹி.ச.)
திமுக அரசின் அலங்கோல ஆட்சியில் அடுக்கடுக்காக தொடரும் படுகொலைகள்- தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டன அறிக்கை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
திருச்சி பீமாநகரில் உள்ள காவலர் குடியிருப்பிற்குள்ளேயே ஒருவர் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிப்பதோடு, திமுக ஆட்சியில் பொதுமக்களுக்கு எங்கு சென்றாலும் பாதுகாப்பில்லை என்ற உண்மையை நெற்றியில் அடித்தாற்போல நமக்கு மீண்டுமொருமுறை உணர்த்தியுள்ளது.
கடந்த நான்கரை ஆண்டுகளாகத் தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்கள் எல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்ட நிலையில், பட்டப்பகலில் காவல்நிலையங்களின் அருகிலும் நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயும் ஒருவரை வெட்டிச் சாய்ப்பது பேஷனாகிவிட்டது.
காவல்துறையினரின் கைகள் கருப்பு-சிவப்பு கயிற்றால் கட்டப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொண்ட குற்றவாளிகளுக்கு சுத்தமாகக் குளிர்விட்டுப் போய்விட்டது. காவல்துறை மீதான மக்களின் நம்பிக்கை இத்துப் போய்விட்டது. இது நமது சமூக அழிவிற்கான அறிகுறி என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு இப்படி சீரழிந்து கிடக்கையில் முழுநேர காவல்துறை தலைமை இயக்குனரை இன்னும் நியமிக்காமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கும் ஆளும் அரசின் ஆணவம் சகித்துக் கொள்ள முடியாதது.
பொதுமக்களின் உயிர்களை வைத்து இப்படி பல்லாங்குழி ஆடிக்கொண்டிருக்கும் இந்தத் தீயசக்தி திமுக அரசு, முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய கள்ளிச்செடி என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ