Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 நவம்பர் (ஹி.ச.)
கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள சுவாமி ஐயப்பனை தரிசிக்க நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மாலை அணிந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலை செல்வர். இவர்கள் வசதிக்காக தெற்கு ரயில்வே சில சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
காக்கிநாடா டவுன் - கோட்டையம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்கள் 07109/07110) இயக்கப்படுகிறது. அந்த வகையில், காக்கிநாடா டவுனில் இருந்து நவம்பர் 17, டிசம்பர் 1, 8, 15, 22, 29, ஜனவரி 5, 12, 19 ஆகிய தேதிகளில் திங்கட்கிழமை மதியம் 1 மணிக்கு இயக்கப்படும் இந்த சிறப்பு ரெயில் மறுநாள் மாலை 5.30 மணிக்கு கோட்டையத்தை சென்றடையும்.
மறுமார்க்கத்தில், கோட்டையம் டவுனில் இருந்து நவம்பர் 18, டிசம்பர் 2, 9, 16, 23, 30, ஜனவரி 6, 13, 20 ஆகிய தேதிகளில் செவ்வாய்கிழமை இரவு 8.30 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் இரவு 11 மணிக்கு காக்கிநாடா டவுனை சென்றடைகிறது.
தமிழகத்தில் இந்த ரெயில் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக இயக்கப்படுகிறது.
இதேபோல், மராட்டிய மாநிலம் ஹஜூர் சாகிப் நாந்தேட் - கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் (07111/07112) இயக்கப்படுகிறது. ஹஜூர் சாகிப் நாந்தேட்டில் இருந்து நவம்பர் 20-ந் தேதி முதல் ஜனவரி 15-ந் தேதி வரை வியாழக்கிழமைகளில் காலை 10 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில், அடுத்த
3-வது நாள் அதிகாலை 3 மணிக்கு கொல்லம் ரெயில் நிலையத்தை சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில், கொல்லத்தில் இருந்து நவம்பர் 22-ந் தேதி முதல் ஜனவரி 17-ந் தேதி வரை சனிக்கிழமைகளில் காலை 5.40 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில், அடுத்த நாள் இரவு 9.30 மணிக்கு ஹஜூர் சாகிப் நாந்தேட்டை சென்றடைகிறது.
இந்த சிறப்பு ரெயில் தமிழகத்தில் காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை வழியாக செல்கிறது.
மேலும், தெலுங்கானா மாநிலம் சார்லபள்ளி - கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் (07113/07114) இயக்கப்படுகிறது. சார்லபள்ளியில் இருந்து செவ்வாய்கிழமைகளில் நவம்பர் 18-ந் தேதி முதல் ஜனவரி 13-ந் தேதி வரை பகல் 11.20 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் இரவு 10 மணிக்கு கொல்லத்தை சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில், கொல்லத்தில் இருந்து நவம்பர் 20-ந் தேதி முதல் ஜனவரி 15-ந் தேதி வரை வியாழக்கிழமைகளில் அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் மதியம் 12.30 மணிக்கு சார்லபள்ளியை சென்றடைகிறது.
தமிழகத்தில் இந்த ரெயில் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செல்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b