Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 10 நவம்பர் (ஹி.ச.)
அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள தனியார் உணவு விடுதியில் நடைபெற்ற 2025 ‘அர்பன் மொபிலிட்டி இந்தியா’ மாநாட்டில் சென்னையின் பொதுப் போக்குவரத்து அமைப்பில் செயல்திறன், அணுகல், உள்ளடக்கம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தும் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டதற்காக சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்துக்கு விருது கிடைத்தது.
ஒன்றிய அமைச்சர் மனோகர் லால் கட்டாரிடம் இருந்து தமிழக போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் சென்னை எம்.டி.சி மேலாண் இயக்குனர் பிரபுசங்கர் ஆகியோர் விருதினை பெற்றுக்கொண்டனர்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று (நவ 10) விடுத்துள்ள எக்ஸ் தள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,
ஒரு நகரத்தின் வாழ்க்கைத் தரம் அதன் பொதுப் போக்குவரத்தின் நம்பகத்தன்மை மற்றும் தரத்தில் பிரதிபலிக்கிறது.
இந்தியாவிலேயே சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரம் என விருது பெற்றுள்ள சென்னை போக்குவரத்து கழகத்திற்கும், துறைக்குப் பொறுப்பேற்று வழிநடத்தும் மாண்புமிகு அமைச்சர் சிவசங்கர் அவர்களுக்கும் பாராட்டுகள்!
நள்ளிரவிலும் பாதுகாப்பான பயணம், டிஜிட்டல் பயணச்சீட்டு முறைகள், தாழ்தள மின்சாரப் பேருந்துகள் என நாளுக்கு நாள் மெருகேறி வரும் MTC, பயணிகளின் தேவையறிந்து, சீரான இடைவெளியில் தொடர்ந்து பேருந்துகளை இயக்கிச் சிறந்திட வாழ்த்துகிறேன்!
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b