Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 10 நவம்பர் (ஹி.ச.)
ஆக்கிரமிப்பில் இருக்கும் கோயில் நிலங்களை இந்து சமய அறநிலையத்துறை தீவிரமாக மீட்டு வருகின்றது.
அந்த வகையில், ஈரோடு பெரிய மாரியம்மன் கோயிலில் வகையறா கோயிலான, காரை வாய்க்கால் மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான 64 சென்ட் ஆக்கிரமிப்பு நிலம், கடந்த 2022ம் ஆண்டு மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட அந்நிலத்தில் கோயிலுக்கு சொந்தமான மண்டபம் உள்ளது. அந்த மண்டபம் பயன்பாட்டிற்கு கொண்டு வர, கோயில் நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. எனவே, சிதிலமடைந்த நிலையில் இருக்கும் அம்மண்டபத்தை, சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, காரைவாய்க்கால் மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான அம்மண்டபத்தை ரூ.1.46 கோடி மதிப்பில் சீரமைக்க, இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்திருந்தது. அந்த வகையில், மண்டபத்தில் பழுதடைந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டது. தொடர்ந்து, கோயில் மண்டபத்தில் சீரமைப்பு பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
எழை, எளிய, நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையிலும், இந்து சமய அறநிலையத்துறையின் வருவாயை அதிகரிக்கும் வகையிலும், பக்தர்களின் கோரிக்கையை ஏற்றும், காரைவாய்க்கால் மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான மண்டபத்தை ரூ.1.46 கோடி மதிப்பில் சீரமைக்க திட்டமிடப்பட்டது.
இதற்காக, மண்டபத்தில் பழுதடைந்த இடங்கள் இடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.
தொடர்ந்து சீரமைப்பு பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இவை தவிர, மண்டபத்தில் மண மேடை, டைனிங் ஹால், நவீன வசதியுடன் கூடிய கழிவறை, பார்க்கிங் உள்ளிட்டவைகள் அமைக்க கட்டுமான பணிகள் துவங்கப்பட்டுள்ளது.
அதாவது கட்டுமான பணிகள் தற்போது வரை 20 சதவீதம் நிறைவடைந்திருக்கிறது. இந்த கட்டுமான பணிகளை விரைந்து முடித்து, பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Hindusthan Samachar / vidya.b