SIR-ல் கிராம பெயர் மாற்றம் - தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராம மக்கள் அறிவிப்பு
தென்காசி, 10 நவம்பர் (ஹி.ச.) நாடு முழுவதும் சிறப்பு வாக்காளர்கள் திருத்தப்பட்டியலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தென்காசி மாவட்டம் திப்பணம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆரியங்காவூர் கிராமத்தை துரைசாமியாபுரம் கிராமம் என்று குறிப்பிட்டு
SIR Form


தென்காசி, 10 நவம்பர் (ஹி.ச.)

நாடு முழுவதும் சிறப்பு வாக்காளர்கள் திருத்தப்பட்டியலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தென்காசி மாவட்டம் திப்பணம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆரியங்காவூர் கிராமத்தை துரைசாமியாபுரம் கிராமம் என்று குறிப்பிட்டு தற்போது சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியலுக்கான விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இன்றைய தினம் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து, 50 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள தங்களின் ஊர் பெயரை மாற்றுவதால் தாங்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாக வாய்ப்புள்ளது.

குறிப்பாக ஆதார், ரேஷன் கார்டுகள் உள்ளிட்ட முக்கிய அடையாள அட்டைகள் ஆரியங்காவூர் என்ற பெயரிலே தங்களிடம் உள்ள நிலையில், தற்போது துரைசாமிபுரம் என்று குறிப்பிட்டு சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியலுக்கான விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒரு ஊரையே இல்லாதது ஆக்குவது போல் உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லை என்றால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை தாங்கள் புறக்கணிக்க போவதாகவும் அந்த கிராம மக்கள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN