பொங்கல் பண்டிகை விடுமுறைக்கான ரயில் டிக்கெட் முன் பதிவு இன்று முதல் தொடக்கம்
சென்னை, 10 நவம்பர் (ஹி.ச.) தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் தேதி போகி பண்டிகையுடன் தொடங்குகிறது. ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை, 15ஆம் தேதி திருவள்ளுவர் தினம், 16ஆம் தேதி உழவர் திருநாளாக கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பண்டிகை விடுமுறைக்கான ரயில் டிக்கெட்  முன்பதிவு இன்று முதல் தொடக்கம்


சென்னை, 10 நவம்பர் (ஹி.ச.)

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் தேதி போகி பண்டிகையுடன் தொடங்குகிறது.

ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை, 15ஆம் தேதி திருவள்ளுவர் தினம், 16ஆம் தேதி உழவர் திருநாளாக கொண்டாடப்படுகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூரில் வசிக்கும் மக்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவுகள் இன்று தொடங்கியுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஊருக்கு செல்லும் பயணிகள் ரயில் முன்பதிவை முன்கூட்டியே செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. பொதுவாக ரயில் டிக்கெட்டுகளை 60 நாட்களுக்கு முன்பாக பதிவு செய்து கொள்ளலாம்.

இதன்படி ஜனவரி 9 முதல் 18ம் தேதிவரை நடைபெறும் பொங்கல் கால பயணங்களுக்கான முன்பதிவு இன்று முதல் தினமும் காலை 8 மணிக்கு தொடங்கும். பொங்கல் வாரத்தில் ரயில் பயணிகளின் பெரும் நெரிசல் எதிர்பார்க்கப்படுவதால் டிக்கெட்டுகள் விரைவாக நிறைவடையும் வாய்ப்பும் உள்ளது.

எனவே பயணிகள் தங்களது பயணத்தேதிகளை முன்கூட்டியே திட்டமிட்டு IRCTC இணையதளம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட ரயில் முன்பதிவு மையங்கள் வழியாக டிக்கெட்டுகளை பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஜனவரி 9ஆம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (நவம்பர் 10) காலை 8 மணி முதல் தொடங்கியுள்ளது.

வைகை எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், முத்துநகர் உள்ளிட்ட முக்கியமான ரயில்களில் டிக்கெட்டுகள் வேகமாக விற்பனையாகி வருகின்றன.

Hindusthan Samachar / vidya.b