Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 10 நவம்பர் (ஹி.ச.)
வந்தே மாதரம்' பாடல் இயற்றி 150 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவை வஉசி மைதானத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் சிலை முன்பு கோவை மாநகர பாரதிய ஜனதா கட்சியினர் சார்பில் வந்தே மாதரம் பாடல் பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்துகொண்டு கட்சியினருடன் வந்தே மாதரம் பாடலை பாடினார்.
முன்னதாக வ.உ.சிதம்பரனார் சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன் கூறுகையில்,
'இளம் தலைமுறைகளிடம் வந்தே மாதரம் பாடலை கொண்டு செல்லும் விதமாக பிரதமர், அதன் 150 வது ஆண்டினை கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
விடுதலைக்காக பாடுபட்ட அனைத்து கட்சிகளும் இதனை முன்னெடுத்திருக்க வேண்டும். விடுதலைப் போராட்டத்தில் தமிழகம் முன்னிலை வகித்தது. ஆனால் தமிழக அரசு எந்த நிகழ்ச்சியையும் முன்னெடுக்கவில்லை.
கோயம்புத்தூர் மத்திய சிலை சிறை வளாகத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் இழுத்த செக்கின் முன்பு கட்சி சார்பின்றி, மாணவ மாணவிகளுடன் வந்தே மாதரம் பாடலை பாட அனுமதி கேட்டு இருந்தோம். பாதுகாப்பு காரணங்களுக்காக எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. திமுக அரசு தேசப்பற்று வளர்க்கும் அனைவரையும் அச்சுறுத்துகிறது. இருந்தும் இன்று வ உ சி மைதானத்தில் நிகழ்ச்சியை நடத்தி உள்ளோம்.
மேலும், கோயம்புத்தூர் மாநகரம் முழுவதும் 100 இடங்களுக்கு மேல் வந்தே மாதரம் பாடும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய உள்ளோம்' என தெரிவித்தார்.
தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடைமுறை குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இதில் நாடகம் செய்து வருவதாகவும், திமுக அரசின் திறமையின்மை மற்றும் ஊழலை திசை திருப்புவதற்காக மத்திய அரசை குறை கூறி வருவதாகவும், பீகார் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றிருந்தபோது இது குறித்து ஒரு புகார் கூட வரவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும், மாநில அரசு அதிகாரிகளை கொண்டு செய்யப்படும் இந்த பணிகளில் பூத் லெவல் அதிகாரிகளை திமுக கட்சியினர் மிரட்டுவதாகவும், இதுகுறித்து புகார் அளிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தூய்மையான நேர்மையான வெளிப்படையான வாக்காளர் பட்டியலை உருவாக்கும் தேர்தல் ஆணையத்தின் பணிகளுக்கு மக்கள் அனைவரும் விழிப்புடன் இருந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும், ஆன்லைன் மூலமாகவும் இப்பணிகளை மேற்கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / V.srini Vasan