மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி நாமக்கல்லில் 15 -ம் தேதி ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
கோவை, 13 நவம்பர் (ஹி.ச.) நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள மதுபானக் கடையை உடனடியாக அகற்றிட வலியுறுத்தி அதிமுக சார்பில் நவ 15 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள
மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி நாமக்கல்லில் 15-ம் தேதி ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


கோவை, 13 நவம்பர் (ஹி.ச.)

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள மதுபானக் கடையை உடனடியாக அகற்றிட வலியுறுத்தி அதிமுக சார்பில் நவ 15 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து, ஆட்சியில் அமர்ந்த விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு, கடந்த 54 மாத காலமாக மக்களின் அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்றித் தராமலும்; மக்கள் நிம்மதியுடன் வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தித் தராமலும்,

வெற்று விளம்பரங்களையும், பொய்யான வாக்குறுதிகளையும் அளித்து, தனது குடும்ப நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக, மக்கள் பல்வேறு வகைகளில் இன்னல்களைச் சந்தித்து, மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருவது வேதனைக்குரிய விஷயமாகும்.

அந்த வகையில், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தொகுதி, பள்ளிபாளையம் நகராட்சி பைபாஸ் சாலையில் FL2 மதுபானக் கடை நடைபெற்று வருகிறது. இந்த மதுபானக் கடையின் இருபுறமும் குடியிருப்புகள் அமைந்துள்ளன.

அதேபோல், மருத்துவமனைகள் மற்றும் வங்கிகளும் செயல்பட்டு வருவதன் காரணமாக, எப்பொழுதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக இருந்து வரும் இந்த இடத்தில் மதுபானக் கடை இருப்பதால், பள்ளி மாணவர்கள், மகளிர், தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் நாள்தோறும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், பள்ளிபாளையம் நகராட்சி, பைபாஸ் சாலையில், பொதுமக்களுக்கு பல்வேறு வகைகளில் இடையூறாக இருந்து வரும் FL2 மதுபானக் கடையை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காத விடியா திமுக பெயிலியர் மாடல் ஸ்டாலின் அரசைக் கண்டித்தும்; மக்கள் நலன் கருதி இந்த மதுபானக் கடையை உடனடியாக அகற்றிட வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நாமக்கல் மாவட்டத்தின் சார்பில் 15.11.2025 - சனிக் கிழமை காலை 10.30 மணியளவில், பள்ளிப்பாளையம் பேருந்து நிலையம் அருகில், கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான

பி. தங்கமணி, எம்எல்ஏ அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர், கழக சட்டமன்ற உறுப்பினர், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள்,

முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

விடியா திமுக பெயிலியர் மாடல் ஸ்டாலின் ஆட்சியின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், மகளிர், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b