Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 13 நவம்பர் (ஹி.ச.)
தூத்துக்குடியில் மிகவும் பழமை வாய்ந்த திருக்கோவிலில் ஒன்றாக உள்ள பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா நவம்பர் 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
9-ம் திருவிழாவான இன்று (நவ 13) முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி சுவாமி-அம்பாளுக்கு காலையில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் பாகம்பிரியாள் அம்பாள் எழுந்தருளினார். இதையடுத்து தேரோட்டம் நடைபெற்றது.
தேரோட்டத்தை தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி வசந்தி, மாநகராட்சி ஆணையர் பிரியங்கா ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் அன்புமணி செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி, அறங்காவலர் குழு தலைவர்கள் கந்தசாமி, செந்தில்குமார் செல்வ சித்ரா, அறிவழகன் உள்பட ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர்கீழ ரத வீதியில் இருந்து புறப்பட்டு 4 ரத வீதி வழியாக வந்து மீண்டும் நிலைக்கு வந்தது. தேரோட்டத்தின் போது கரகாட்டம், சிலம்பாட்டம், கோலாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை போன்ற பல்வேறு நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், பல்வேறு பாரம்பரிய மேள தாளங்களும் இடம்பெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேசுவரர் திருக்கல்யாணம் வரும் 15ம் தேதி சனிக்கிழமை இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b