Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 13 நவம்பர் (ஹி.ச.)
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே கன்றுக்குட்டியை கொன்ற சிறுத்தை, வனத்துறையினர் வைத்துள்ள கூண்டில் பிடிபடாமல் பொதுமக்கள் விவசாயத் தோட்டங்களில் உலா வருகிறது.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை குப்புச்சிபுதூர் பகுதியில் கடந்த 27ஆம் தேதி தனியார் தோட்டத்தில் புகுந்த சிறுத்தை ஒன்று, கிடா ஆடு மற்றும் கன்றுக்குட்டியை அடித்துக் கொன்றது.
மேலும், மாலை நேரங்களில் விவசாயத் தோட்டத்தில் சிறுத்தை தென்பட்டதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
இதையடுத்து, வனத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில், பொள்ளாச்சி வனச்சரகர் ஞானபால முருகன் தலைமையிலான வனத்துறையினர் சிறுத்தை நடமாடும் வழித்தடத்தில் ஆடு மற்றும் நாயுடன் கூடிய கூண்டு ஒன்று வைத்து கண்காணித்து வந்தனர்.
ஆனால், சிறுத்தை வழிமாறி சென்றதால் வனத்துறையினர், வனத்துறையினர் காளியப்பன் தோட்ட பகுதியில் ஒரு கூண்டும், அம்மன் கோயில் நெல்லிக்காய் தோப்பு பகுதியில் ஒரு கூண்டும் வைத்தனர்.
அந்த கூண்டுகளுக்குள் சிறுத்தையை ஈர்ப்பதற்காக மீன்களும் வைக்கப்பட்டன. ஆனால், நள்ளிரவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை, கூண்டு வைக்கப்பட்ட பகுதிக்கு வராமல், அருகில் இருக்கும் சுமதி என்பவரின் தோட்டத்திற்குள் புகுந்து, அங்கிருந்த கன்று குட்டியை அடித்துக் கொன்றது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், சிறுத்தை கால் தடங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN