சிதம்பரம் அரசு பொது மருத்துவமனை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில் கடலூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, 13 நவம்பர் (ஹி.ச.) கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த 73 வயதான முதியவர் சுப்பிரமணியன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சிதம்பரம் அரசு பொது மருத்துவமனையில் ஏராளமான பொதுமக்கள் சிகிச்சைக்காக வருவதாகவும், ஆனால், மருத்துவமனைக்கு
High


சென்னை, 13 நவம்பர் (ஹி.ச.)

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த 73 வயதான முதியவர் சுப்பிரமணியன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,

சிதம்பரம் அரசு பொது மருத்துவமனையில் ஏராளமான பொதுமக்கள் சிகிச்சைக்காக வருவதாகவும், ஆனால், மருத்துவமனைக்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என்றும், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசரகால வாகனங்களை நிறுத்துவதற்குக்கூட இடமில்லை என தெரிவித்துள்ளார்.

மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளதாகவும் ஆக்கிரமிப்புகளை அகற்றினால், மருத்துவமனை வளாகத்துக்கான அடிப்படை கட்டுமானங்களை செய்ய முடியும் என குறிப்பிட்டுள்ள அவர்,

இதுதொடர்பாக ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி நான்கு மனுக்களை மாவட்ட ஆட்சியர், சிதம்பரம் தாசில்தார், சிதம்பரம் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி, சிதம்பரம் நகராட்சி ஆணையர் ஆகியோருக்கு அனுப்பியதாகவும், ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்..

இந்த மனு தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை வளாகத்தில் 56 ஆக்கிரமிப்புகள் உள்ளதாக தெரிவித்தார். மேலும், ஆக்கிரமிப்புகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சிதம்பரம் நகராட்சிக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

அப்போது சிதம்பரம் நகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சம்பந்தப்பட்ட நிலம் அரசு நிலம் அதனால், அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பாளர்கள் நகராட்சிக்கு வரி செலுத்தி வருகிறார்கள், என்றார்.

இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ஆக்கிரமிப்பில் உள்ள நிலம், யாருடைய கட்டுப்பாட்டுக்கு வருகிறது? என்பதில் பிரச்னை உள்ளது. எனவே, உரிய ஆவணங்களுடன் கடலூர் மாவட்ட ஆட்சியர், சிதம்பரம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி, சிதம்பரம் நகராட்சி ஆணையர் ஆகியோர் வரும் 18-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர். விசாரணையை அன்றைய தினத்துக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Hindusthan Samachar / P YUVARAJ