Enter your Email Address to subscribe to our newsletters

பாட்னா, 13 நவம்பர் (ஹி.ச.)
பீகார் சட்டசபை தேர்தல் கடந்த 6-ந் தேதி மற்றும் 11-ந் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
மொத்தம் உள்ள 243 சட்டசபை தொகுதிகளில் கடந்த 6-ந் தேதி முதல்கட்டமாக 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. இதுவரை இல்லாத அளவாக 65.09 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில், மீதி உள்ள 122 சட்டசபை தொகுதிகளில் நேற்று முன்தினம் 2-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடந்தது. பலத்த பாதுகாப்புடன் 45 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது.
தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு, மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. மொத்தம் 69 சதவீத வாக்குகள் பதிவாகின.
இது, முதல்கட்ட தேர்தலில் பதிவான வாக்கு சதவீதத்தை விட அதிகம் ஆகும். அதிக அளவாக, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரே மாவட்டமான கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் 76.23 சதவீத வாக்குப்பதிவு நடந்தது.
இந்த நிலையில், பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (வெள்ளிக்கிழமை) எண்ணப்படுகின்றன.
காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் தபால் வாக்குகளும், அதனை தொடர்ந்து மின்னணு வாக்குகளும் எண்ணப்படுகின்றன.
243 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட பிகாரில், ஆட்சியமைக்க 122 இடங்கள் தேவை. பீகாரில் புதிதாக ஆட்சி அமைப்பது யார் என்பது குறித்து நாளை பகல் 12 மணிக்குள் தெரிய வரும்.
பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவின் தேசிய ஜனநாயக கூட்டணி, மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் தெரியவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / JANAKI RAM