Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 13 நவம்பர் (ஹி.ச.)
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தொரப்பள்ளி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்ராஜ் (32). பெங்களூரில் தனியார் பைனான்ஸ் நிறுவன ஊழியராக பணிபுரிந்து வந்த இவர், முன் விரோதம் காரணமாக கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி கொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட ஓசூர் நகர போலீசார், தொரப்பள்ளியைச் சேர்ந்த நவீன்ரெட்டி (29), அஸ்லம் (19), சுப்பிரமணி (42) மஞ்சுநாத் (35), வெங்கடேஷ் (23) உள்ளிட்ட 10 பேரை கைது செய்து தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து, கடந்த 13 ஆம் தேதி நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த அனைவரும், நாள்தோறும் ஓசூர் நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கொலை வழக்கில் மூன்றாவது நபராக உள்ள மஞ்சுநாத்,தொரப்பள்ளி கிராமத்தில் இருந்து தென்பெண்ணை ஆற்றுப்பாலம் அருகே நடந்து வந்தார். அப்போது, அவ்வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று, அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதில், அவரது இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே, அவர் மீது மோதிய கார், தொடர்ந்து உத்தனப்பள்ளி பகுதியில் பள்ளி மாணவர்கள் மீதும் மோதுவது போல் சென்றது. இதை பார்த்த அப்பகுதியினர் காரை துரத்திச் சென்றனர்.
இதனால் பயந்து போன காரில் இருந்த 3 பேரும், பரப்பள்ளி சாலையோரம் காரை நிறுத்திவிட்டு தப்பியோடினர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், வெங்கட்ராஜ் கொலைக்கு பழி தீர்ப்பதற்காக அவரது ஆதரவாளர்கள் மஞ்சுநாத்தை கார் ஏற்றி கொலை செய்ய முயன்றது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பி ஓடியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN