பேரூராட்சி துணைத் தலைவரின் கணவர் வன் கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது
தேனி, 13 நவம்பர் (ஹி.ச.) தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி பேரூராட்சி மன்ற தலைவராக திமுகவைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி என்பவர் இருந்து வருகிறார். இவர் பட்டியலினத்தை சேர்ந்தவர். துணைத் தலைவராக மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த ஞானமணி என்ற
Kenguarpatti Municipality


தேனி, 13 நவம்பர் (ஹி.ச.)

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி பேரூராட்சி மன்ற தலைவராக திமுகவைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி என்பவர் இருந்து வருகிறார். இவர் பட்டியலினத்தை சேர்ந்தவர்.

துணைத் தலைவராக மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த ஞானமணி என்ற பெண் பதவி வகித்து வருகிறார். இவரது கணவர் எஸ்.பி.தமிழன், திமுகவில் பேரூர் கழகச் செயலாளராக உள்ளார்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் நபார்டு வங்கி நிதியான ரூ.1 கோடியே 18 லட்சத்தில் கெங்குவார்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட மந்தை பகுதியில் புதிய சாலை அமைக்கும் திட்டம் நடைமுறைக்கு வந்தது.

அப்போது பேரூராட்சி மன்ற துணைத் தலைவரின் உறவினர் ஒருவர், நியமன ஆணை பெறாமலேயே சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இதைப் பற்றி அறிந்த பேரூராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, 13வது வார்டு உறுப்பினர் ராஜவேல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி அங்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், இரு தரப்பினரும் சாலை மறியல் போராட்டத்தில் இறங்கினர்.

இந்த விவகாரம் தொடர்பாக பேரூராட்சி தலைவர் சார்பில் துணைத் தலைவர் தரப்பு மீது தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதேபோல, பேரூராட்சி மன்ற துணைத் தலைவரின் தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஞானமணி, அவரது கணவர் எஸ்.பி. தமிழன், மகன் ஸ்டீபன் மற்றும் கார் ஓட்டுநர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் இருந்து ஸ்டீபன் முன்ஜாமீன் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து, தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் எஸ்.பி.தமிழன் மற்றும் கார் ஓட்டுநர் முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்தனர்.

அப்போது, இந்த வழக்கை விசாரித்த எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி அனுராதா, இருவரின் முன்ஜாமீன் மனுக்களை நிராகரித்தார். இதையடுத்து, அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

அப்போது திடீரென இருவருக்கும் நெஞ்சுவலி ஏற்பட்டதால், அவர்களை பெரியகுளம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் போலீசார் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN