Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 நவம்பர் (ஹி.ச.)
கடந்த 4-ம் தேதி சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள வடுகத்தாம்பட்டி பகுதியில் பாமக நிர்வாகி ஒருவருடைய தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்றிருந்தனர்.
அப்போது அப்பகுதியில் வாகனம் நிறுத்துவது தொடர்பாக அன்புமணி ஆதரவாளர்களுக்கும், பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் ஆதரவாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
மேலும், பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் ஆதரவாளருடன் சென்றிருந்த ஐந்து கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
இந்த நிலையில், ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்து ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோன்று அருள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி தரப்பினர் எம்எல்ஏக்கள் சதாசிவம், மயிலம் சிவக்குமார் உள்ளிட்ட போராட்டம் நடத்தியதை தொடர்ந்து அருள் தரப்பிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், சென்னை டிஜிபி அலுவலகத்தில் அன்புமணி ஆதரவாளரான பாமக வழக்கறிஞர் பாலு கொடுத்த புகாரில், இந்த சம்பவத்தில் நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், ஆனால், எங்கள் தரப்பைச் சேர்ந்த ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள், அருள் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கிறார். அவர் தொடர்ந்து வன்முறையை தூண்டி வருகிறார் எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாலு, பாமகவை சேர்ந்த ராஜேஷ் என்ற மாற்றுத்திறனாளியை அருள் தரப்பினர் தாக்கியதில் தான் பிரச்சனை தொடங்கியதாகவும், இந்த விவகாரத்தை முழுமையாக விசாரிக்காமல் காவல்துறை ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அருள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வன்முறையை தூண்டும் படி எழுதி வருகிறார் பேசியும் வருகிறார் என குற்றம்சாட்டிய பாலு, அருள் தனக்கு சொந்தமான மருத்துவமனையில் தனது ஆதரவாளர்களை சிகிச்சை பெறுவது போல் அனுமதித்து ஜி.கே மணியும் அவரது மகன் தமிழ்குமரனும் செல்லும்போது தங்கள் தரப்பினர் பாதிக்கப்பட்டது போல் அருள் காண்பிப்பதாக பாலு தெரிவித்தார்.
அருள் மீது இரண்டு கொலை முயற்சி வழக்குகள் உள்ளது அவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த பாலு, முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என அன்புமணி தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். 99 சதவீத பாமக அன்புமணி தலைமையில் தான் இயங்குகிறது எனவும் அவர் கூறினார்.
ஒருவருக்கு பாதுகாப்பு கொடுப்பது காவல்துறை விருப்பம், ஆனால் அருள் அதற்கு தகுதியானவரா என பார்க்க வேண்டும். அருள் தனக்கு கொடுத்திருக்கும் காவல்துறை பாதுகாப்பை வைத்துக்கொண்டு சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டியவர், கும்பகோணத்திற்கு செல்லும் போது தனது சமூக வலைதளத்தில் வாங்க கணக்கு தீர்த்துக் கொள்ளலாம் என பதிவிட்டு விட்டு அருள் செல்கிறார். இப்படிதான் தொடர்ந்து அவர் வன்முறையை தூண்டிக் கொண்டிருக்கிறார் எனவும் தெரிவித்தார்.
காவல்துறை இதில் நியாயமாக செயல்படவில்லை எனவும், எங்கள் தரப்பில் கைது செய்தால் அவர்களையும் கைது செய்யுங்கள், எங்கள் தரப்பில் குண்டாஸ் போட்டால் அவர்கள் தரப்பிலும் குண்டாஸ் போடுங்கள். இருதரப்பு மீதும் நடவடிக்கை எடுத்தால் தான் விசாரணையில் பிரச்சனைக்கு யார் காரணம் என கண்டுபிடிக்க முடியும் என பாலு தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் பாமகவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியை அருள் ஆதரவாளர்கள் தாக்கியது குறித்து மாற்றுத் திறனாளிகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம். மாற்றுத்திறனாளி ஆணையமும் காவல்துறையிடம் விளக்கம் கேட்டுள்ளது. இத்தோடு விடப்போவதில்லை நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம் எனவும் தெரிவித்த பாலு எதிர் தரப்பு மீது வழக்குப்பதிவு செய்ய 500 பேரைத் திரட்டி போராட்டம் நடத்திய பிறகு தான் அவற்றை காவல்துறை செய்தது எனவும், இந்த விவகாரத்தில் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடக்கும் எனவும் தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ