Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 13 நவம்பர் (ஹி.ச.)
திருப்பூர் மாவட்டத்தில் உள்நாட்டு பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களுக்கு ,பவர் டேபிள் நிறுவனங்கள் ஜாப் ஒர்க் முறையில் பின்னலாடைகளை உற்பத்தி செய்து கொடுக்கின்றனர்.
உள்நாட்டு பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் பவர் டேபிள் சங்கத்திடம் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூலி உயர்வு ஒப்பந்தம் செய்து கொள்கின்றனர். அதன்படி கடந்த 2022ஆம் ஆண்டு இரு சங்கத்தினர் இடையே ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
இதில் பவர் டேபிள் நிறுவனங்களுக்கு முதல் ஆண்டு 17 சதவீத கூலி உயர்வும் , அடுத்து வரும் 3 ஆண்டுகளுக்கு தலா 7 சதவீதமும் வழங்க ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது.
ஆண்டுதோறும் இவை முறையாக பின்பற்றப்பட்டு வரக்கூடிய நிலையில் கடந்த ஜூன் 6-ம் தேதி முதல் உயர்த்தப்பட வேண்டிய 7 சதவீத கூலி உயர்வு சில நிறுவனங்கள் வழங்கினாலும் ஒரு சில நிறுவனங்கள் வழங்காமல் கால நீட்டிப்பு செய்து வருவதால் ஜாப் ஒர்க் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனால் உடனடியாக கூலி உயர்வை அமல்படுத்த வேண்டும் என கடந்த 7 ஆம் தேதி முதல் கூலி உயர்வு வழங்காத நிறுவனங்களில் இருந்து ஆர்டர்கள் எடுப்பதையும் , செய்து முடித்த ஆர்டர்கள் கொடுப்பதையும் நிறுத்தி வைத்தனர்.
இந்நிலையில், கூலி உயர்வு தொடர்பாக பவர் டேபிள் உரிமையாளர்கள் இன்று (நவ 13) முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் திருப்பூர் குமரானந்தபுரம் பகுதியில் உள்ள பவர் டேபிள் நிறுவனம் தொழிலாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b