Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 13 நவம்பர் (ஹி.ச.)
திருச்சி மாவட்டம் திருச்சி- சென்னை- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தேவதானம் அருகே உள்ள சஞ்சீவி நகர் பகுதியில் உள்ள சிக்னலில் முன்னே இன்று (நவ 13) காலை சென்ற லாரி மீது பின்னால் வந்த லாரி பயங்கர வேகத்தில் மோதியது.
இவ்விபத்தில் லாரிகள் ஒன்றுடன் ஒன்று சிக்கிக் கொண்டன. பின்னால் வந்த லாரி ஓட்டுநரின் கால் முறிந்தது. அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சஞ்சீவி நகர் பகுதியை கடக்கும்போது அதிவேகத்தில் வரும் வாகனங்களால் விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே சஞ்சீவி நகர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும் என்பது அப்பகுதி பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.
இதற்காக அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று (நவ 13) காலை சர்க்கார்பாளையம்- கல்லணை சாலை பகுதியை சேர்ந்த 100-க்கும் அதிகமானோர் இன்று காலை சஞ்சீவி நகர் சிக்னலில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த கோட்டை காவல்நிலைய ஆய்வாளர் விஜயபாஸ்கர் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதிகாரிகளை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமூக தீர்வு காண்பதாக காவல்துறையினர் கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.
அதையடுத்து திருச்சி கிழக்கு தாசில்தார் விக்னேஸ்வரன் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறையின் உதவி பொறியாளர் அசோக்குமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
4 மாதத்திற்குள் சுரங்கப்பாதை அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கும் என்று உறுதி அளித்தனர். அதன்பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Hindusthan Samachar / vidya.b