Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 13 நவம்பர் (ஹி.ச.)
ராமநாதபுரம் மாவட்டத்தில் சூறைகாற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் நள்ளிரவு முதல் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கடல் சீற்றம் ஏற்பட்டது.
இதனால் ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்றுக்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப்படகு ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடைந்தது.
ராமேஸ்வரம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு சேதம் அடைந்த படகுகளை படகின் உரிமையாளர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருவதுடன், தரைதட்டி நிற்கும் படகை கடலுக்கு இழுத்து செல்வதற்கான பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் தற்போது நடைபெற்று வரும் தூண்டில் வளைவு பணிகளை விரைவுபடுத்திட வேண்டும், நேற்று சூறைக்காற்றுடன் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் சேதம் அடைந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான படகுகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் மீனவர்கள் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகளை நிறுத்தும் போது இடைவெளி விட்டு நங்கூரம் நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் நாட்டுப் படகு மீனவர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் மீன் பிடிக்க செல்ல வேண்டுமென மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN