பழனியில் பராமரிப்பு பணிகள் காரணமாக ரோப் கார் சேவை தற்காலிக நிறுத்தம்
திண்டுக்கல், 13 நவம்பர் (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெளியூர்களிலிருந்தும் ,வெளிநாடுகளில் இருந்தும் வருகை தருகின்றனர்.
பழனியில் பராமரிப்பு பணிகள் காரணமாக ரோப் கார் சேவை தற்காலிக நிறுத்தம்


திண்டுக்கல், 13 நவம்பர் (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெளியூர்களிலிருந்தும் ,வெளிநாடுகளில் இருந்தும் வருகை தருகின்றனர்.

இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் படிப்பாதை, யானை பாதை, மின் இழுவை ரயில், ரோப் கார் சேவை வழியாக மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். பொதுவாக வெள்ளி, சனி ,ஞாயிறு தினங்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும் மின் இழுவை ரயில் ,ரோப்கார் நிலையத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்வார்கள்.

பழனி ரோப்கார் நிலையத்தில் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாதாந்திர, வருடாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவது வழக்கம். அப்போது ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டு பணி மேற்கொள்ளப்படும்.

அதன்படி பழனி முருகன் கோவில் ரோப்கார் நிலையத்தில், பராமரிப்பு பணிகள் காரணமாக இன்றும்(நவ 13), நாளையும் ரோப் கார் சேவை இயங்காது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எனவே பக்தர்கள் மின்இழுவை ரெயில், படிப்பாதையை பயன்படுத்தி மலைக்கோவிலுக்கு செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b