Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 13 நவம்பர் (ஹி.ச.)
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனச்சரகத்திற்கு உட்பட்ட புளியங்கோம்பை வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, புதர் மறைவில் இருந்து துர்நாற்றம் வீசியதால் வனத்துறை ஊழியர்கள் ஏதாவது வனவிலங்கு இறந்து கிடக்கிறதா என தேடி பார்த்தனர்.
அப்போது அங்கு ஒரு பெண் யானை இறந்து கிடப்பதை கண்டு, உடனடியாக சத்தியமங்கலம் வனச்சரக அலுவலர் தர்மராஜிற்கு தகவல் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வனச்சரக அலுவலர், பெண் யானை இறந்து கிடப்பதை நேரில் பார்த்து உறுதி செய்தார்.
இதுகுறித்து வனத்துறையினரிடம் கேட்ட போது, இறந்த பெண் யானைக்கு சுமார் 30 வயது இருக்கலாம் எனவும், கால்நடை மருத்துவர் மூலம் யானையின் உடலை உடற்கூராய்வு செய்த பின் இறப்புக்கான காரணம் தெரியவரும் என தெரிவித்தனர்.
இதேபோல் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே இரண்டு வாரங்களுக்கு முன் பெண் யானை எலும்புக்கூடாக மீட்கப்பட்டது.
பேரணாம்பட்டு வனத்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்ட போது, காட்டுப் பகுதியில் எலும்புக்கூடு ஒன்றை கண்டெடுத்து, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பேரணாம்பட்டு வனச்சரக அலுவலர்கள், விபரங்கள் குறித்து கேட்டறிந்தனர்.
பின்னர் வனத்துறையினர் சுமார் 5 கி.மீ தூரம் காட்டு வழியாக சென்று, யானை இறந்திருந்த இடத்தை அடைந்தனர். அதனைத்தொடர்ந்து, பெண் யானை இறந்த இடத்திற்கு வந்த பேரணாம்பட்டு கால்நடை மருத்துவர்கள், பிரேதப் பரிசோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பெண் யானைக்கு ஏழு வயது என்பதும், அது தவறி விழுந்து இறந்திருக்கலாம் என தெரிவித்தனர்.
தற்போது வனப்பகுதிகளை ஒட்டிய இடங்களிலும் மனித ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. எனவே, குடிநீர், உணவு தேடி யானை உள்ளிட்ட வன விலங்குகள் ஊர்களுக்கும், குடியிருப்புப் பகுதிகளுக்கும் அடிக்கடி வருகின்றன.
மேலும், விவசாய நிலங்களிலும் யானைகள் புகுந்து பயிர்களை உணவாக எடுத்துக் கொள்கின்றன. இதன் காரணமாக, யானை - மனித மோதல் அதிகரித்து வருகிறது.
மேலும், விவசாய நிலங்களை பாதுகாக்க மின் வேலிகளை அமைப்பதாலும் யானைகள் உயிரிழக்கும் சம்பவங்களும் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகின்றன.
Hindusthan Samachar / ANANDHAN