Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 நவம்பர் (ஹி.ச.)
அரசுப் பள்ளி ஆசிரியர்களில் ஊதிய முரண்பாடுகளை சரி செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம் பின்வருமாறு,
பள்ளிக்கல்வி இயக்குநரகத்தில் இணை இயக்குநர்கள், அலுவலர்களுக்கான பணி பொறுப்புகள் மாற்றப்பட்டு ஆசிரியர்கள், பணியாளர்களின் ஊதிய முரண்பாடு சார்ந்த கருத்துருவை நிதிக்கட்டுப்பாடு அலுவலரின் நிர்வாக பொறுப்பில் செயல்படுத்த ஆணையிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஊதிய முரண்பாடு சரிசெய்தல் சார்ந்த பணிகளை பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குநர்களுக்கு பின்வருமாறு ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், நேர்முக உதவியாளர்கள் (இடைநிலை), உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், நேர்முக அலுவலர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், பணியாளர்கள் ஆகியோர் தங்கள் ஊதிய முரண்பாடுகளை இணை இயக்குநரிடம் (பணியாளர் தொகுதி) சமர்ப்பிக்க வேண்டும்.
அதேபோல, நேர்முக உதவியாளர்கள் (மேல்நிலை), மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் ஆகியோர் இணை இயக்குநரிடம் (மேல்நிலைக் கல்வி) சமர்ப்பிக்க வேண்டும். எனவே, வருங்காலங்களில் ஊதிய முரண்பாடு சார்ந்த கோப்புகளை உரிய விதிகளின்படி பரிசீலித்து சம்பந்தப்பட்ட இணை இயக்குநர்களுக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b