Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 நவம்பர் (ஹி.ச.)
முதல்வர் ஸ்டாலின் இன்று (13.11.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், திருப்பத்தூர், நாமக்கல், மயிலாடுதுறை, விருதுநகர், திண்டுக்கல், நீலகிரி, இராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, அரியலூர், திருவாரூர், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் 62 கோடி 51 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 740 பணிபுரியும் மகளிர் பயன்பெறும் வகையில் 12 புதிய தோழி விடுதிகள் அமைக்கும் பணிகள், கோயம்புத்தூர் - “பூஞ்சோலை” அரசினர் மாதிரி கூர்நோக்கு இல்லம் மற்றும் திருச்சிராப்பள்ளி அரசினர் கூர்நோக்கு இல்லத்திற்கு 27.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய கட்டடங்கள் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டி. சென்னை, இராயபுரம் அரசினர் குழந்தைகள் இல்லத்தில் 7 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்கள்.
திருப்பத்தூர், நாமக்கல், மயிலாடுதுறை, விருதுநகர், திண்டுக்கல், நீலகிரி, இராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, அரியலூர், திருவாரூர், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் மொத்தம் 62 கோடி 51 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 740 பணிபுரியும் மகளிர் பயன்பெறும் வகையில் அமைக்கப்படவுள்ள 12 புதிய தோழி விடுதிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டினார்கள். இதன்மூலம் தமிழ்நாட்டில் 27 புதிய தோழி விடுதிகள், கூடுதலாக 2,790 மகளிர் பயன்பெரும் வகையில் வரும் ஆண்டில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளன.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் “பூஞ்சோலை” என்ற பெயரில் அமையவுள்ள அரசினர் மாதிரி கூர்நோக்கு இல்லத்திற்கு 16 கோடியே 95 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கும், திருச்சிராப்பள்ளி, அரசினர் கூர்நோக்கு இல்லத்திற்கு 10 கோடியே 95 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கும் தமிழ்நாடு முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டினார்கள்.
மேலும் இராயபுரம் அரசினர் குழந்தைகள் இல்லத்திற்கு தற்போது 14,876 சதுர அடி பரப்பளவில் தரை மற்றும் முதல் தளம் கொண்ட புதிய கட்டடம் 7 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்கள்.
இந்த இல்லத்தில் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் 70 சிறுவர்கள் தங்கி பயன்பெறும் வகையில் சிறுவர்கள் தங்கும் அறைகள், வகுப்பறைகள். நூலக அறை, திறன் பயிற்சி அறை, மருத்துவ அறை, சமையலறை, உணவுக்கூடம், உள்ளிட்ட அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் இப்புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை இயக்குநர் (மு.கூ.பொ.) ஷில்பா பிரபாகர் சதீஷ், கூடுதல் இயக்குநர் மற்றும் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஷரண்யா அறி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / vidya.b