Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 நவம்பர் (ஹி.ச.)
டிச.16 முதல் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் பணியாளர்கள் சென்னை தலைமைச் செயலகம் முன்பாக காலவரையற்ற காத்திருப்புப் போராட்டத்தை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.
அதோடு, இந்த முடிவுக்கு அனைத்து பணியாளர்களும் ஆதரவு தரும்படியும் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்குவது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு, அரசு நினைத்தால் மட்டுமே வழங்க முடியும் என டாஸ்மாக் ஊழியர்களிடம், டாஸ்மாக் நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதனால், டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். தமிழக அரசின் டாஸ்மாக் நிர்வாகம், 4,787 சில்லறை கடைகள் வாயிலாக மதுபான வகைகளை விற்பனை செய்து வருகிறது.
இவற்றில் 25,000க்கும் மேற்பட்டோர் தொகுப்பூதியத்தில் பணிபுரிகின்றனர். அவர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் கட்சி சாராத தொழிற்சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளனர்.
அந்தவகையில், தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் (AITUC) மாநில செயற்குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது. டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகள் மீது தமிழ்நாடு அரசும், நிர்வாகமும் திறந்த மனதுடன் நேர்மறை அணுகுமுறையோடு பேசி தீர்வு காண வேண்டும் என மாநில செயற்குழுக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் சட்டபூர்வமாக தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகளாகும்.
ஆனால், டாஸ்மாக் நிர்வாகம் அந்தக் கோரிக்கைகள் அரசு கொள்கை முடிவு எடுத்து, ஒப்புதல் தர வேண்டிய கோரிக்கைகள் என்று தொடர்ந்து கூறி வருகிறது.
டாஸ்மாக் பணியாளர்களின் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் மீது தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என வலியுறுத்தி டிச.16 முதல் தலைமைச் செயலகம் முன்பாக காலவரையற்ற காத்திருப்புப் போராட்டத்தை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கைகள் கட்சி அரசியல் சார்ந்தோ, சங்க கருத்தோட்டங்கள் கொண்டதோ, அரசுக்கு எதிராகவோ முன் வைக்கப்பட்டதல்ல, 23 ஆண்டுகளாக தொடரும் பணிப்பாதுகாப்பற்ற நிலைக்கு முடிவு கண்டு, ஒட்டு மொத்த டாஸ்மாக் பணியாளர்களின் கண்ணியமான வாழ்வுரிமைக்கான கோரிக்கைகளாகும் என்பதை கருத்தில் கொண்டு அனைத்துப் பணியாளர்களும் காலவரையற்ற காத்திருப்புப் போராட்டத்தில் பங்கேற்று, கோரிக்கைகள் வெற்றி பெற ஆதரவும், ஒத்துழைப்பும் வழங்குமாறு பணியாளர்கள் அனைவுரையும் மாநில செயற்குழுக் கூட்டம் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN