Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 நவம்பர் (ஹி.ச.)
தமிழக அரசு, முதல்-அமைச்சர் கணினித் தமிழ் விருது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான செய்திக்குறிப்பில்,
பன்னூறு ஆண்டுகளாக வற்றாத படைப்புக்களைக் கொண்டு, சீரிளமையோடு இயங்கி வரும் தமிழுக்கும், தமிழ்மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்குத் தொண்டாற்றிடும் தமிழ்த்தாயின் திருத்தொண்டர்களுக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளையும் சிறப்புகளையும் அளித்து, அவர்தம் தொண்டுக்கும் தமிழுக்கும் பெருமை சேர்த்து வருகின்றது.
தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கேற்ப, உலகமெலாம் கணினி வழித் தமிழ் மொழி பரவச் செய்யும் வகையில் கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக முதல்-அமைச்சர் கணினித் தமிழ் விருது என்ற பெயரில் 2013ஆம் ஆண்டுமுதல் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இவ்விருது பெறுபவருக்கு விருதுத் தொகையாக ரூபாய் 2 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படுகிறது.
2025ஆம் ஆண்டுக்குரிய முதல்-அமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு தனியர் மற்றும் நிறுவனத்திடமிருந்து, தமிழ் வளர்ச்சிக்கான மென்பொருள்கள் / செயலிகள் வரவேற்கப்படுகின்றன. விருதுக்கு அனுப்பப்படவுள்ள மென்பொருள்கள் போட்டிக்குரிய ஆண்டிற்கு முந்தைய மூன்றாண்டுக்குள் தயாரிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும்.
இவ்விருதுக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளைத் தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்தில் (www.tamilvalarchithurai.tn.gov.in) இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை - 600 008 என்ற முகவரிக்கு அஞ்சல் வாயிலாக 31.12.2025 ஆம் நாளுக்குள் உரிய ஆவணங்களோடு விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும்.
கூடுதல் விவரமறிய விரும்புவோர் 044 - 28190412, 044 – 28190413 ஆகிய தொலைபேசி எண்களை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்.
உரிய நாளுக்குள் (31.12.2025) பெறப்படும் விண்ணப்பங்களே ஏற்றுக் கொள்ளப்படும் என்பதை நினைவிற் கொள்ள கனிவுடன் வேண்டுகின்றோம்.
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM