Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 13 நவம்பர் (ஹி.ச.)
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை இப்ப போராட்டம் நடைபெறும் எனக் கூறி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்க மாநிலத் தலைவர் செல்லதுரை, பொதுச் செயலாளர் ஜெசி, மாவட்ட பொறுப்பாளர் கண்ணன், மாவட்ட நிர்வாகிகள் பானு லதா, லதா, சுதா உள்ளிட்ட 25 நிர்வாகிகள் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இது குறித்து பேசிய தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் முன்னாள் தலைவர் கே.பழனிச்சாமி கூறியதாவது:
கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் நேர்முக உதவியாளரிடம் அரசு போட்ட உத்தரவை அமல்படுத்த சொல்லி போராடி வருகிறோம். உதவியாளரிலிருந்து சமையலறாளராவும், சமையல் உதவியாளர்களுக்கு அமைப்பாளர்களாகவும், நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பணி மாறுதல், 10 ஆண்டு அல்லது 20 ஆண்டுகள் நிறைவடைந்த தொழிலாளர்களுக்கு தேக்க ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய அரசு போட்ட உத்தரவை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.
ஆனால் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி புறக்கணித்து வருகின்றனர்.
இங்கு வந்த பல ஆட்சியரின் நேர்முக உதவியாளரை சந்தித்து பேசியும், போராடியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாவட்ட ஆட்சியரையும் நேரில் சந்தித்து பேசி உள்ளோம் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் கடந்த மாதம் 8 தேதி இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக நேர்முக உதவியாளரை நேரில் சந்தித்து பேசும்போது வரும் அக்.17ஆம் தேதி அங்கன்வாடி ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவோம் என கூறி வாக்குறுதி கொடுத்து கடிதம் ஒன்றை வழங்கினார்.
இந்நிலையில் கடந்த அக்.24ஆம் தேதி சென்று கேட்டபோதும் அந்தப் பணிகள் சென்று கொண்டிருப்பதாக கூறி மீண்டும் அலை கழிக்கிறார்.
இந்த நிலையில் இன்று அங்கன்வாடி ஊழியர்கள் சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதிலும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரை முற்றுகையிட்டு இங்கேயே காத்திருந்து போராடி வருகிறோம். மாவட்ட ஆட்சியர் இல்லாததால் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த அழைத்தார்கள். கிட்டத்தட்ட முப்பது நிமிடங்கள் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டவில்லை. மாவட்ட ஆட்சியர் தான் முடிவு எடுக்க முடியும் என்று கூறிவிட்டார். மேலும் போராட்டம் நடத்த அனுமதி இல்லை நீங்கள் கலைந்து செல்ல வேண்டும் என கூறிவிட்டார்.
ஆனால் ஊழியர்கள் சங்கத்தினர் உடன்பாடு எட்டும் வரை கலைய மாட்டோம் எனக் கூறி இரவு உணவு சாப்பிட்ட பின்பும் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.
இந்தப் போராட்டம் மாவட்டத்தோடு நிற்கப் போவதில்லை மாநிலம் முழுவதும் நடைபெறும் என்றார்.
Hindusthan Samachar / V.srini Vasan