Enter your Email Address to subscribe to our newsletters

பாட்னா, 15 நவம்பர் (ஹி.ச.)
அலிநகர் தொகுதியில் 25 வயதே ஆன பாடகி மைதிலி தாகூர், 11,730 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பீகாரின் மாதுபானியில் பிறந்த மைதிலி தாகூர், பின்னர் குடும்பத்துடன் டெல்லியில் வசித்து வந்தார். பிரபல நாட்டுப்புற பாடகியான மைதிலிக்கு, கடந்த ஜூன் மாதம்தான் 25 வயது ஆனது.
பீகாரில் சட்டசபை தேர்தல் அறிவிப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு பா.ஜனதாவில் சேர்ந்து, தர்பங்கா மாவட்டத்தின் அலிநகர் தொகுதியில் போட்டியிட்டார்.
இளம் வேட்பாளர் என்ற ரீதியிலும், பிரபலம் என்ற வகையிலும் இந்த தேர்தலில் கவனிக்கப்படும் வேட்பாளராக இருந்தார்.
அதே நேரம் மாநிலத்துக்கு வெளியே வசிப்பவர் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது இருந்தது. எனினும், தான் பீகார்வாசி எனவும், அலிநகர் தொகுதியில் வீடு வாங்கி வசிப்பேன் என்றும் தன்னை விமர்சித்தவர்களுக்கு பிரசாரத்தில் பதிலடி கொடுத்தார்.
தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், மைதிலி தாகூர் அலிநகர் தொகுதியில் அபார வெற்றி பெற்றார்.
தன்னை எதிர்த்து போட்டியிட்ட ராஷ்டிரீய ஜனதாதள மூத்த தலைவர் பினோத் மிஸ்ராவை 11,730 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இதன் மூலம் பீகார் சட்டசபையின் இளம் எம்.எல்.ஏ. என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இதற்கு முன்பு கடந்த
2005-ம் ஆண்டு வெற்றி பெற்ற சுயேச்சை எம்.எல்.ஏ. தவுசீப் ஆலம், 2015-ம் ஆண்டு வெற்றி பெற்ற ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி ஆகியோர்தான் (26 வயது) மாநிலத்தில் இளம் எம்.எல்.ஏ.க்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / JANAKI RAM