Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 நவம்பர் (ஹி.ச.)
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் 630 வழித்தடங்களில் 3,200 பேருந்துகளை இயக்கி வருகிறது. இதில் தினமும் சுமார் 32 லட்சம் பயணிகள் சேவை பெறுகின்றனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதியும், பயண வசதிகளுக்காகவும் புதிய மின்சார பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் புதியதாக, 270 மின்சார பேருந்துகள் பயன்பாட் டிற்கு கொண்டு வரப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கிகள் உதவியுடன், சென்னையில் பல்வேறு கட்டங்களாக, 697 கோடி ரூபாயில், 625 மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதுவரை, 255 மின்சார பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
அடுத்தகட்டமாக, பூந்தமல்லி, பல்லவன் இல்ல பணிமனைகளில் இருந்து, 270 மின்சார பேருந்துகள் இயக்கப்படும். பூந்தமல்லியில் இருந்து, 125 பேருந்துகள் இம்மாத இறுதிக்குள்ளும், பல்லவன் இல்லத்தில் இருந்து, 145 பேருந்துகள், ஜனவரிக்குள் இயக்கப்படும்.
இந்த பேருந்துகள் பயன்பாட்டிற்கு வரும்போது, பயணியர் கூடுதல் பஸ் வசதி பெற முடியும். எரிபொருள் செலவும், 30 சதவீதம் குறையும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Hindusthan Samachar / vidya.b