Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 நவம்பர் (ஹி.ச.)
பீகாரில் நடந்து முடிந்த தேர்தல் என்பது அனைவருக்கும் ஒரு பாடமாக அமைந்துள்ளது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பீகார் சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 14, 2025 தேதியான நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்து பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகித்து வந்தது. காங்கிரஸ் எதிர்பாராத விதமாக ஆரம்பம் முதலே பின்னடைவு சந்தித்து வந்தது. இந்த சூழலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும் வெற்றியைப் பதிவு செய்தது.
இந்த வெற்றியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியில் விரைவில் பெரிய பிளவு ஏற்படும் என்றும், மக்கள் காங்கிரஸை முழுமையாக நிராகரித்து விட்டனர்; இனியும் அந்தக் கட்சியின் மீதான அதிருப்தி அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டுப் பேசினார்.
பீகாரில் இருக்கக்கூடிய 243 சட்டமன்றத் தொகுதிகளில், தேசிய ஜனநாயக கூட்டணி 200 தொகுதிகளில் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் எதிர்பாராத விதமாக கடும் பின்னடைவு சந்தித்து, படுதோல்வி அடைந்தது.
இந்தத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது சமூக வலைதள பதிவில், “காங்கிரஸ் கூட்டணியிடம் நம்பிக்கை வைத்த பீகாரில் உள்ள லட்சக்கணக்கான வாக்காளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பீகாரில் இந்த தேர்தல் முடிவு உண்மையிலேயே ஆச்சரியம் அளிக்கிறது. தொடக்கத்திலிருந்தே நியாயமற்ற முறையில் நடந்த தேர்தலில், வெற்றி பெற தவறிவிட்டோம். அரசியலமைப்பு, சட்டம் மற்றும் ஜனநாயகத்தைக் பாதுகாப்பதற்காகவே இந்தப் போராட்டம்,” என குறிப்பிட்டார்.
மேலும், “பீகார் தேர்தல் 2025 அனைவருக்கும் ஒரு பாடம். முதுபெரும் தலைவர் நிதீஷ் குமார் அவர்களின் தீர்க்கமான வெற்றிக்காக வாழ்த்துத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் பீகார் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் அவருக்கு என் நல்வாழ்த்துகள்.
இளம் தலைவர் தேஜஸ்வி யாதவின் அயராத பிரச்சாரத்திற்கும் நன்றி, என குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN