Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு, 15 நவம்பர் (ஹி.ச.)
சென்னை தாம்பரத்தில் உள்ள இந்திய விமான படையின் விமானப்படை தளத்தில் விமானப்படை வீரர்களுக்கு, விமானம் இயக்குதல் உட்பட, பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
இங்குள்ள வீரர்கள், தொடர் விமான பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.
அந்த வகையில் நேற்று
(நவ 15) பகல், 1:30 மணிக்கு, இந்த தளத்திலிருந்து, 'பிளேட்டஸ் பி.சி.,7' என்ற பயிற்சி விமானம் புறப்பட்டது.
இந்த விமானத்தை விமானி சுபம், 30, என்பவர் இயக்கினார். விமானம் சென்னை வான்வெளியில் தாம்பரத்தை தாண்டி திருப்போரூர் பகுதியில், நேற்று பகல் 2:00 மணிக்கு பறந்தது.
அப்போது, விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டறிந்தார்.
உடனடியாக, விமானத்தை பாதுகாப்பாக, அப்பகுதியில் தரையிறக்க முயன்றார். ஆனால், எதிர்பார்த்தபடி விமானத்தை தரையிறக்க முடியவில்லை. விமானம் கீழே விழப்போவதை அறிந்த விமானி, பாராசூட்டில் குதித்து தப்பினார்.
கட்டுப்பாட்டை இழந்த விமானம், திருப்போரூர் - நெம்மேலி சாலையில் உள்ள, தனியார் உப்பு பேக்கிங் செய்யும் தொழிற்சாலையின் பின்பகுதியில் சேற்றில் விழுந்ததில், விமானத்தின் சில பாகங்கள் சிதறின.
சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தோர் விரைந்து வந்தனர். விமானம் சிதறி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்து, திருப்போரூர் போலீசார், தீயணைப்பு துறையினர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். விமானி பரங்கிமலை ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் கருப்பு பெட்டி தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. தற்போது விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டது.
விசாரணைக்கு பின்னர் விபத்திற்கான காரணம் தெரிய வரும்.
இதனிடையே பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு சிதறிய பாகங்களை தேடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
Hindusthan Samachar / vidya.b