தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை, 15 நவம்பர் (ஹி.ச.) சென்னை மாநகராட்சியில் 30,000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், தூய்மைப் பணியாளர்கள் அதிகாலையே தங்கள் பணியைத் தொடங்க வேண்டிய சூழலில், பணிபுரியும் இடத்திற்கே உணவை எடுத்து வந்து சாப்பிடுவதில்
தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்


சென்னை, 15 நவம்பர் (ஹி.ச.)

சென்னை மாநகராட்சியில் 30,000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், தூய்மைப் பணியாளர்கள் அதிகாலையே தங்கள் பணியைத் தொடங்க வேண்டிய சூழலில், பணிபுரியும் இடத்திற்கே உணவை எடுத்து வந்து சாப்பிடுவதில் பல்வேறு நடைமுறைப் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து, சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளை உணவு வழங்கும் திட்டத்திற்கு நிர்வாக அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.

காலை, மதியம், இரவு என 3 வேளைகளிலும் இலவச உணவு வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ரூ.186.94 கோடி ஒதுக்கிடு செய்துள்ளது. அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான தனியாா் நிறுவனமானது, ஒப்பந்தப்புள்ளி அடிப்படையில் தோ்வு செய்யப்பட்டது.

காலை உணவில் இட்லி, போன்றவை, மதியம் ரசம், சாம்பார், கூட்டு, இரவு சப்பாத்தி அல்லது ரொட்டி உள்ளிட்டவை அடங்கும். இந்த உணவுகள், ஊட்டச்சத்து நிறைந்தவையாக இருக்கும்.

இந்நிலையில் சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் இன்று (நவ 15) காலை நடைபெற்ற விழாவில், சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு மூன்று வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த உணவுத் திட்டம் மூலம் 31,373 தூய்மை பணியாளர்கள் பயன்பெறுவர். தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு கொண்டு செல்லும் வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும் தூய்மை பணியாளர்களுக்கு குடியிருப்பு வீடுகள் மற்றும் புதிய நலத்திட்டங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Hindusthan Samachar / vidya.b