Enter your Email Address to subscribe to our newsletters

திருநெல்வேலி, 15 நவம்பர் (ஹி.ச.)
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அடுத்த விஎம் சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்து கிருஷ்ணன் (26).
இவர் தனியார் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், இவர் நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, அருகிலுள்ள ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்ப சென்றார்.
பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, நிறுத்திய இடத்தில் அவரது இருசக்கர வாகனம் மாயமாகி இருந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து பேருந்து நிலையத்தில் இருந்த போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.
இதையடுத்து, பேருந்து நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து, ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
இதற்கிடையே, இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தை தள்ளியபடியே பேருந்து நிலையத்திற்குள் நுழைந்தனர். அவர்களை பார்த்து சந்தேகம் அடைந்த போலீசார், அவர்களை நோக்கி சென்றனர்.
இதனால், அச்சமடைந்த இருவரும் வாகனத்தை கீழே போட்டுவிட்டு அங்கிருந்து ஓடினர். ஆனால், போலீசார் அவர்களை விரட்டிச் சென்று பிடித்து, மேலப்பாளையம் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த முத்துக்குமார் மற்றும் நெல்லை நாங்குநேரியைச் சேர்ந்த தங்கராஜா என்பது தெரியவந்தது. இதில், முத்துக்குமார் தவெக நிர்வாகியாக உள்ளார். அவர் மெக்கானிக் கடை நடத்தி வந்துள்ளார்.
இதுகுறித்து போலீசாரிடம் அவர்கள் அளித்த வாக்குமூலத்தில்,
நாங்கள் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற நிலையில், சிறிது நேரத்தில் பெட்ரோல் காலியாகி நடுவழியில் பைக் நின்றுவிட்டது. இதனால் செய்வதறியாமல் குழம்பிய நாங்கள், வாகனத்தை திருடிய இடத்திலேயே விட்டுவிட முடிவு செய்தோம்.
ஆனால், ஏற்கனவே பைக்கை திருடிய இடத்தில் நிறுத்தினால், சிசிடிவி கேமராவில் மாட்டி விடுவோம் என பயந்து, வேறு இடத்தில் நிறுத்துவதற்காக வந்தோம். ஆனால், போலீசாரிடம் சிக்கிக் கொண்டோம்
எனத் தெரிவித்தனர்.
இதையடுத்து, இருவர் மீதும் மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN