Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 நவம்பர் (ஹி.ச.)
பள்ளிகளில் ஆய்வுப் பணிகளை மேம்படுத்தும் நோக்கில் ‘பள்ளிப் பார்வை-2.0’ எனும் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் பள்ளிகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்க ‘பள்ளிப் பார்வை’ எனும் செயலி அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.
துறைசார்ந்த அலுவலர்கள் பள்ளி ஆய்வின்போது வகுப்பறை கற்பித்தல், மாணவர் வருகை, கற்றல் நிலை உள்ளிட்டவற்றை மையமாக கொண்டு இந்த செயலியில் குறிப்புகளை பதிவேற்றம் செய்து வந்தனர்.
தற்போது அதை மேம்படுத்தி ‘பள்ளிப் பார்வை-2.0’ செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் திறன் இயக்கத்தில் பயிற்சி பெறுபவர்களுக்கு மட்டுமே இனி மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படும். அதே போல, அலுவலர்கள் பள்ளிகளில் ஆய்வு செய்யும்போது குறைந்தது 2 மாணவர்களின் நோட்டுப் புத்தகங்களையாவது கட்டாயம் சரிபார்க்க வேண்டும்.
ஆய்வுப் பணிகளை திறம்பட செய்யவும், முழுமையான மதிப்பீட்டை உறுதி செய்யவும் அனைத்து அலுவலர்களும் இந்த புதிய செயலியை பயன்படுத்த வேண்டும்.
இதை பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b