Enter your Email Address to subscribe to our newsletters

பாட்னா, 15 நவம்பர் (ஹி.ச.)
பீகார் தேர்தலுக்கு முன்பு வரை ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு மாற்றான அரசியல் சக்தியாகவும், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது யார் என்பதை முடிவு செய்யும் கட்சியாகவும் பிரசாந்த் கிஷோரின் கட்சி இருக்கும் என்று கூறப்பட்டது.
அதற்கு ஏற்ப பா.ஜ.க., ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட ஆளும் கூட்டணியையும், ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டணியையும் தேர்தல் பிரசாரத்தில் பிரசாந்த் கிஷோர் கடுமையாக விமர்சித்து வந்தார்.
மொத்தம் உள்ள 243 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களம் இறக்கினார். ஆனால் அவர்களில் 5 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகிவிட்டனர்.
இதனால் ஜன்சுராஜ் கட்சி 236 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டது.
இந்த தேர்தலில் முதலில் போட்டியிடப் போவதாக அறிவித்து பின்னர் போட்டியில் இருந்து கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் விலகினார். தனது கட்சி 150 இடங்களில் வெற்றி பெறும் என்றும் பிரசாந்த் கிஷோர் கூறிவந்தார்.
பீகாரில் ஆட்சிக்கு வந்தால் இப்போது அமலில் உள்ள மதுவிலக்கை ரத்து செய்து மீண்டும் மது விற்பனையைத் தொடங்குவோம் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தார். ஆனால் அவரது கட்சிக்கு பீகார் மக்கள் படுதோல்வியைப் பரிசளித்துள்ளனர்.
போட்டியிட்ட 238 தொகுதிகளில் அனைத்திலும் ஜன்சுராஜ் கட்சி வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர். அதோடு 236 தொகுதிகளில் டெபாசிட்டும் பறி கொடுத்தனர்.
சில இடங்களில் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை ('நோட்டா') வாக்குகளை விடவும் குறைவாகப் பெற்றனர்.
இதன் மூலம் பீகார் மக்கள் தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோரை முழுமையாக புறக்கணித்து இருப்பது தெரியவந்துள்ளது.
தேர்தல் பிரசாரத்தின்போது பா.ஜ.க. தலைவர்கள் யாரும் பிரசாந்த் கிஷோர் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
அது போல இந்தியா கூட்டணி தலைவர்களும் பிரசாந்த் கிஷோரை கண்டு கொள்ளாமல் தவிர்த்தனர். இதுவும் பிரசாந்த் கிஷோர் கட்சி தோல்விக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.
பிரதமர் மோடி தமிழகத்தில் தி.மு.க., மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கும் தேர்தல் உத்தி வகுப்பாளராக பிரசாந்த் கிஷோர் பணியாற்றி உள்ளார்.
அப்போது தேர்தல்களில் அக்கட்சிகள் வெற்றி பெற்றதால் தேசிய அளவில் மிகவும் பிரபலமான அரசியல் நிபுணராக பிரசாந்த் கிஷோர் உருவெடுத்தார்.
ஆனால் அவரது கட்சிக்கு பலன் அளிக்காமல் போய்விட்டது.
Hindusthan Samachar / JANAKI RAM