Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 நவம்பர் (ஹி.ச.)
கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில், தமிழகத்தில் திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ராமநாதபுரம், திண்டுக்கல், நாகப்பட்டினம், விருதுநகர், திருப்பூர், கிருஷ்ணகிரி மற்றும் நீலகிரி ஆகிய 11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டன.
அதாவது, எடப்பாடி பழனிசாமி, பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் கட்டப்பட்ட இந்த மருத்துவக் கல்லூரிகள், தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டப்படவில்லை என்றும் மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவர் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்திருந்தார்.
கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் அளிக்கப்பட்ட இந்த புகாரின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது, புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் 5 ஆண்டுகள் கடந்தும், புகார் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் தனது புகார் மீது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ராஜசேகரன் உயர் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறார்.
அந்த மனுவில், தனது புகார் குறித்து விசாரணையை தொடங்கி உள்ளதாகக் கூறிய லஞ்ச ஒழிப்புத்துறை, புகார் எந்த முடிவையும் எட்டவில்லை என்பதால், தமிழக காவல்துறையினர் மீது நம்பிக்கை இழந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மத்திய அரசின் 60 சதவீத நிதி பங்களிப்புடன் 11 மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளதால், இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ. அமைப்பு விசாரணை செய்ய வேண்டும். மற்றொருபுறம் மத்திய புலனாய்வு விசாரணை அமைப்புகள் விசாரணை செய்வதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியை திரும்பப் பெற்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
இது நீதி பரிபாலனத்தில் குறுக்கிடுவது போல் உள்ளதாக தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b