Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 15 நவம்பர் (ஹி.ச.)
சென்னை கலைவாணர் அரங்கில், மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளையும் உணவுத்திட்டம், குடியிருப்பு வீடுகள் மற்றும் புதிய நலத்திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று (நவ 15) தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
ஆரோக்கியமாக வாழ அடிப்படை தூய்மை தான். வெயில், மழை, வெள்ளம் என எந்த பேரிடர் வந்தாலும் தூய்மைப் பணியாளர்கள் பங்கு முக்கியமானது. உங்களால் தான் சென்னை நீர்நிலைகள் தூய்மையாக உள்ளது. தூய்மை பணியாளரகள் செய்வது வேலையல்ல, சேவை. அவர்களை பாதுகாப்பது எங்கள் கடமை. விடியும் போது சென்னை நகரம் தூய்மையாக இருக்க தூய்மை பணியாளர்களே காரணம்.
சென்னையில் தூய்மை பணியாளர்களுக்காக 200 வார்டுகளிலும் கழிப்பறைகளுடன் ஓய்வு அறை அமைக்கப்படும். 300 சதுர அடியில் ஓய்வு அறை அமைக்கப்படும். தூய்மை பணியாளர்களுக்கான உணவு வழங்கும் திட்டம் டிசம்பர் 6ம் தேதி முதல் அனைத்து நகரப் பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும். தமிழகம் தான் கிளீன் சிட்டி என்று சொல்ல வேண்டும். அதற்கு நீங்கள் எல்லோரும் துணை நிற்க வேண்டும். தூய்மைப்பணியாளர்கள் வாரிசுகள் உயர்கல்வி பெற்று, அரசு பதவிகளை பெற வேண்டும்.
மக்கள் அனைவரும் சுய ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். குப்பைகளை 100 சதவீதம் தரம் பிரித்து கொடுக்க வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு தேவையான உதவிகளை அரசு நிச்சயம் செய்து தரும். தூய்மை பணியாளர்களின் வாழ்க்கை மேம்பட நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இந்த மாநகரமே உங்களின் சேவையை பார்த்து நன்று உணர்வுடன் வணங்குகிறது. ஒட்டுமொத்த சென்னை சார்பாக உங்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தன்னலம் கருதாமல் உழைக்கும் தூய்மை பணியாளர்களின் சேவையை போற்றுவோம். அரசு தனது கடமையை செய்யும்.
மக்களும் பொறுப்பாக இருந்து பொது இடங்களையும், நமது மனதையும் தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
Hindusthan Samachar / vidya.b