இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு தவெக தலைவர் விஜய் கடிதம்
சென்னை, 15 நவம்பர் (ஹி.ச.) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் சட்டசபை தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களில் தவெக தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும்,அந்தக் கூட்டங்களுக்கு தங்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி
இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு தவெக தலைவர் விஜய் கடிதம்


சென்னை, 15 நவம்பர் (ஹி.ச.)

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் சட்டசபை தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களில் தவெக தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும்,அந்தக் கூட்டங்களுக்கு தங்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தேர்தல் ஆணையத்துக்கு தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதி உள்ளார்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு தவெக தலைவர் விஜய் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது

பொருள்: தமிழகத்தில் அரசியல் கட்சிகளுடன் நடைபெறும் ஆலோசனை கூட்டங்களில் தமிழக வெற்றி கழகத்தை உட்படுத்துவதற்கான அவசர வேண்டுகோள்.

ஐயா,

1. தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பாக உங்கள் அவசர தலையீட்டைக் கோரி கடிதம் எழுதுகிறேன். தவெக தமிழ்நாடு முழுவதும் ஒரு வெளிப்படையான இருப்பை நிறுவியுள்ளது. மேலும் வரவிருக்கும் தேர்தல்களிலிலும் போட்டியிடவுள்ளது. இந்த நிலையில், அங்கீகரிக்கப்பட்டதா இல்லையா என்ற பார்வையின்றி அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வழங்கப்படுதல் அரசியலமைப்பின் அடிப்படை வடிவமைப்பின் ஒரு அங்கமாக அமைவதாக வலியுறுத்துகிறோம்.

2. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சுற்றறிக்கைகள் மற்றும் அறிவிப்புகளில் நாங்கள் குறிப்பிடப்பட்டிருந்தபோதிலும், ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்பதில் இருந்து TVK விலக்கப்படுகிறது. இது பங்கேற்பில் சமத்துவத்தை குறைக்கிறது.

3. மாநிலத் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக, மாநில தேர்தல் ஆணையர் அலுவலகம் கூட்டும் ஆலோசனைக் கூட்டங்களில் தவெக சேர்க்கப்படாதது, தேர்தல் செயல்முறைகளின் கண்காணிப்பில் ஒரு முக்கியமான வாக்காளர் பகுதியை பங்கேற்பிலிருந்து விலக்குகின்ற விளைவுகளை உருவாக்குகிறது.

4. வெளிப்படைத்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய செயல்முறைகளின் உயர்ந்த தரத்தைக் காக்கும் நோக்கத்தில், எதிர்காலத்தில் நடைபெறும் அனைத்து கூட்டங்கள், ஆலோசனைகள் மற்றும் ஒருங்கிணைப்பு நிகழ்வுகளில் தவெகவிற்கு தக்க அறிவிப்பு வழங்கி, அவற்றில் பங்கேற்க அழைக்க வேண்டுமென தாழ்மையுடன் கோருகிறோம். நியாயமான தேர்தல் செயல்முறையை உறுதி செய்வதில் தேர்தல் ஆணையத்தின் முயற்சிகளுக்கு தவெக அதன் முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளது.

5. எனவே, இந்த தேர்தல் முறையை மேம்படுத்தும் பொது நோக்கில் எவருக்கும் பாதகமில்லாத இந்த நியாயமான கோரிக்கையை சாதகமாக பரிசீலிக்கும்படி, இந்திய அரசியலமைப்பின் பிரிவு 324 இன் கீழ் உங்களது மேற்பார்வை அதிகாரங்களின் கீழ், மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு அரசு ஆகியோருக்கு பொருத்தமான வழிமுறைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் வரவிருக்கும் தேர்தல்கள் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் கூட்டப்படும் அனைத்து ஆலோசனைகள் மற்றும் கலந்துரையாடல்களிலும் தவெக முறையாக சேர்க்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கிறோம்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b