Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 நவம்பர் (ஹி.ச.)
சென்னை கொளத்தூர் சோமநாத சாமி கோயில் சார்பில் 4 இணைகளுக்கு இன்று (நவ 16) திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருள்களை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்.
பின்னர் நிருபர்களை சந்தித்து அவர் பேசியதாவது:
இந்த அரசு பொறுப்பேற்ற பின், 2022-23ம் நிதியாண்டில் 500 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, ரூ.20 ஆயிரம் செலவில் சீர்வரிசை பொருட்களுடன் நடத்தி வைக்கப்பட்டன.
தொடர்ந்து, 2023-24ம் நிதியாண்டில் 600 இணைகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் செலவிலும், 2024-25ம் நிதியாண்டில் 700 இணைகளுக்கு தலா ரூ.60 ஆயிரம் செலவிலும், இந்த நிதியாண்டில் 1000 இணைகளுக்கு தலா ரூ.70 ஆயிரம் செலவிலும் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன.
அதில் ஒரு பகுதியாக இன்றைய தினம் 4 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளில் கோயில்கள் சார்பில் 2,800 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டு, சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் மேலும் 1,000 திருமணங்களை நடத்திட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இத்திருமணங்கள் வரும் மார்ச் மாத இறுதிக்குள் நடத்தி முடிக்கப்படும். மாற்றுத்திறனாளிகளின் திருமணத்திற்கு அவர்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் கோயில் திருமண மண்டபங்கள் சேவை கட்டணத்தை தவிர வேறு எந்த வாடகையும் இல்லாமல், வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், கோயில்களின் சார்பில் மாற்றுத்திறனாளி இணைகளுக்கும் 4 கிராம் தங்கத் தாலியுடன் சீர்வரிசைப் பொருட்கள் வழங்கி இதுவரை 161 திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளன. 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கொளத்தூர், சோமநாத சாமி கோயிலுக்கு ரூ. 2.73 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வருகின்ற 30ம் தேதி குடமுழுக்கு நடத்தப்பட உள்ளது. இந்த அரசு பொறுபேற்ற நாள் முதல் இன்று நடைபெறும் 8 கோயில்களின் குடமுழுக்கையும் சேர்த்து இதுவரை 3,813 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.
ரூ.8,100 கோடி மதிப்பிலான 8,028 ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளதோடு, கோயில்களுக்கு சொந்தமான 2,20,502.84 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. இந்த அரசு பொறுப்பேற்ற பின் உபயதாரர்கள் கோயில்களின் திருப்பணிக்கு ரூ.1,547.57 கோடியினை நன்கொடையாக அளித்துள்ளனர்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தை அந்த மாவட்டத்தின் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நாளை மறுதினம் திருவண்ணாமலையில் நடத்திட முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கின்றார்.
கோயில்களின் அர்ச்சகர்கள் அரசியல் மனமாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும். கோயிலுக்கு வருகின்ற பக்தர்களுக்கு தெய்வ சன்னிதானத்தில் அவர்களது மனம் குளிர்கின்ற வகையிலே நலத்தை நாடி பிரார்த்தனை செய்வது, அந்த தெய்வத்திற்குண்டான அபிஷேகம் மற்றும் தீபாராதனைகளில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர இதுபோன்ற அரசியல் சாயத்தை பூசிக் கொண்டால் அவர் சொன்ன அந்த சின்னத்தை ஆதரிப்பவரை தவிர்த்து மற்றவர்கள் அவரை எப்படி குருக்களாக ஏற்றுக் கொள்வார்.
இதுகுறித்து புகார் வந்திருக்கின்றது. இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் மூலம் இது குறித்து பரிசீலித்து, தேவைப்பட்டால் உரிய விசாரணை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர்கள் முல்லை, மோகனசுந்தரம், மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார், மாநகராட்சி உறுப்பினர் நாகராஜன், உதவி ஆணையர்கள் சிவக்குமார், பாரதிராஜா, கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் மோகன், சந்துரு, மகேஷ்குமார் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b