நவ 30-ம் தேதி வரை பயிர்க்காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு - அமைச்சர் பன்னீர்செல்வம் அறிவிப்பு
சென்னை, 16 நவம்பர் (ஹி.ச.) விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கடன் உதவி திட்டங்கள், மானிய உதவி திட்டங்கள் என பல திட்டங்கள் தமிழகத்தில் நடைமுறையில் உள்ளன. இந்த நிலையில் பருவமழை மற்றும் இயற்கை பேரிடர் காரணமாக பயிர்கள் பாதிக்கப்படும்
நவ 30-ம் தேதி வரை பயிர்க்காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு


சென்னை, 16 நவம்பர் (ஹி.ச.)

விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கடன் உதவி திட்டங்கள், மானிய உதவி திட்டங்கள் என பல திட்டங்கள் தமிழகத்தில் நடைமுறையில் உள்ளன. இந்த நிலையில் பருவமழை மற்றும் இயற்கை பேரிடர் காரணமாக பயிர்கள் பாதிக்கப்படும் நிலையில், அதனை காப்பீடு செய்ய அரசு சார்பாக ஓவ்வொரு ஆண்டும் அறிவுறுத்தப்படும்.

அதன்படி, நடப்பாண்டில், விவசாயிகள் மும்முரமாக பயிர் காப்பீடு செய்து வந்தனர். நேற்றே(நவ 15) காப்பீடு செய்ய கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. காப்பீட்டுக்கான தேதியை நீட்டிக்க விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து காப்பீட்டு தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

சாகுபடி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தற்போது, விவசாயிகள் சம்பா நெற்பயிரை முழு வீச்சில் சாகுபடி செய்து வருகின்றனர். இதுவரை 26.25 இலட்சம் ஏக்கர் பரப்பில் சம்பா நெற்பயிர் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நாள் வரை, 6.27 இலட்சம் விவசாயிகளால் 15 இலட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது மொத்த சாகுபடி பரப்பில் 57 சதவீதமாகும். இதே நாளில் கடந்த வருடம் 10 இலட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிர் காப்பீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர். மதுரை, புதுக்கோட்டை கரூர், சேலம். திருப்பூர். காஞ்சிபுரம். செங்கல்பட்டு, தேனி, இராமநாதபுரம். திருச்சிராப்பள்னி அரியலூர், வேலூர். இராணிப்பேட்டை திருப்பத்தூர். திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம். கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை கடலூர், திருவள்ளூர் மற்றும் ஈரோடு ஆகிய 27 மாவட்டங்களில் சம்பா நெற்பயிரை காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி 2025 நவம்பர் 15ஆம் தேதி என அறிவிக்கை செய்யப்பட்டது.

எனினும் பல மாவட்டங்களில் தொடர் மழையின் காரணமாக குறுவை நெல் அறுவடை மற்றும் சம்பா நெல் நடவு பணிகள் தாமதமானதாலும், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஈடுபட்டுள்ளதால் அடங்கல் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதாலும், சம்பா/ தாளடி/ பிசானம் நெற்பயிர் காப்பீட்டுக்கான கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைக்கிணங்க. விடுபட்ட அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கிணங்க சம்பா/ தாளடி/பிசானம் நெற்பயிர்க் காப்பீட்டுக்கான கடைசி தேதியை 2025 நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டித்து ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் துரித நடவடிக்கையின் பேரில் சம்பா/ தாளடி/ பிசானம் நெற்பயிர் செய்யும் விவசாயிகளின் நன்மையை கருதி பயிர் காப்பீடு செய்யும் காலக்கெடுவானது நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே வேளாண்மைத் துறை அலுவலர்கள் தத்தம் பகுதிகளில் உள்ள விவசாயிகளை அணுகி பயிர் காப்பீடு செய்திடும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எனவே, அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், தருமபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கரூர், மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருச்சி, திருப்பத்தூர், திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில், இதுவரை சம்பா நெற்பயிரை காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் நவம்பர் 30ம் தேதிக்குள் பதிவு செய்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b