Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 நவம்பர் (ஹி.ச.)
தமிழகத்தில் காற்றாலை, சூரியசக்தி உள்ளிட்ட பசுமை மின் திட்டங்களை, பொது - தனியார் கூட்டு முயற்சியில் செயல்படுத்தும் பணியில், தமிழக பசுமை எரிசக்தி கழகம் ஈடுபட்டுள்ளது.
இந்நிறுவனம் திருவாரூர் மற்றும் கரூர் மாவட்டங்களில், தலா, 15 மெகாவாட் திறனில் சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கவும், அதில் உற்பத்தியாகும் மின்சாரத்தை மூன்று நேரம் சேமிக்கும் வகையில், 'பேட்டரி' வசதி ஏற்படுத்தவும், தமிழக மின் வாரியத்தின் துணை நிறுவனமான, பசுமை எரிசக்தி கழகம், டெண்டர் கோரியுள்ளது.
மின் நிலையம் அமைக்க தேவைப்படும் இடத்தை, பசுமை எரிசக்தி கழகம் வழங்கும். அங்கு தனியார் நிறுவனம், தன் செலவில் மின் நிலையத்தை அமைத்து இயக்க வேண்டும். அதனிடம் இருந்து, 25 ஆண்டுகளுக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்து, தமிழக மின் பகிர்மான கழகத்திற்கு பசுமை எரிசக்தி கழகம் வினியோகம் செய்யும்.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
திருவாரூர் மற்றும் கரூரில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்க தேர்வாகும் நிறுவனம், தினமும் பகலில் கிடைக்கும் சூரியசக்தி மின்சாரத்தை சேமித்து, மாலை, 6:00 முதல் இரவு, 9:00 மணி வரை திரும்ப வழங்கும் வகையில், 'பேட்டரி ஸ்டோரேஜ்' கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
'டெண்டரில்' பங்கேற்கும் நிறுவனங்களில், ஒரு யூனிட் மின் கொள்முதலுக்கு, குறைந்தபட்ச விலைப்புள்ளி வழங்கும் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, மின் நிலையம் அமைக்க பணி ஆணை வழங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Hindusthan Samachar / vidya.b