Enter your Email Address to subscribe to our newsletters

திருவனந்தபுரம், 16 நவம்பர் (ஹி.ச.)
கேரளாவில் அமீபா மூளை காய்ச்சல் பாதிப்பால் இதுவரை 36 பேர் மரணம் அடைந்தனர்.
குளம், குட்டைகளில் தேங்கி கிடக்கும் நீரில் வாழும் ஒரு வகை அமீபா வாய், மூக்கு வழியாக புகுந்து மூளை காய்ச்சலை ஏற்படுத்துகிறது. இதனால் உயிரிழப்புகள் கேரளாவில் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசன் நாளை (17-ந் தேதி) தொடங்கும் நிலையில் ஏராளமான பக்தர்கள் அய்யப்பனை தரிசிக்க வருவார்கள். அவர்களின் சுகாதார நலனை கருத்தில் கொண்டு, மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:-
சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்கள் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளில் குளிக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீரில் வாழும் ஒரு வகை அமீபாவால், மூளை காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இதனை மனதில் கொண்டு அய்யப்ப பக்தர்கள் ஆறுகள், குளங்களில் குளிக்கும் போது மூக்கு மற்றும் வாய் பகுதிகளை நன்றாக மூடியபடி குளிக்க வேண்டும்.
அதே போல் குளிக்க பயன்படுத்திய துணியை நன்றாக உதறிய பிறகு தலை மற்றும் முகத்தை துடைக்க வேண்டும்.
பக்தர்கள் கண்டிப்பாக கொதிக்க வைத்த தண்ணீரையே குடிக்க வேண்டும். சபரிமலை உள்ளிட்ட இடங்களில் திறந்த வெளிகளில் மலம் கழிக்க தடை உள்ளதால், சுகாதாரமான கழிப்பறைகளை பக்தர்கள் பயன்படுத்த வேண்டும். சபரிமலை, பம்பை, நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் செயல்படும் மருத்துவமனைகளில் பாம்பு கடிக்கான விஷ எதிர்ப்பு மருந்துகள் உள்ளன.
மேலும் திருவிதாங்கூர் தேவஸ்தானத்துடன் இணைந்து விரிவான மருத்துவ வசதிகள் சபரிமலையில் செய்யப்பட்டுள்ளது.
சபரிமலை பயணத்திற்கு முந்தைய நாட்களில் உடல் சோர்வு உள்பட உடல் நல பிரச்சினைகளை தவிர்க்க நடை பயிற்சி, உடற்பயிற்சி என லேசான பயிற்சிகளில் பக்தர்கள் ஈடுபட வேண்டும். மலை ஏறும் போது சோர்வான நிலைக்கு செல்லுதல், மார்பு வலி, மூச்சுத்திணறல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். 04735-203232 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அவசர உதவியை நாடலாம்.
இது தவிர அய்யப்ப பக்தர்களுக்கு உயர் மருத்துவ வசதிகளை அளிக்க கோன்னி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதன்மை மருத்துவமனையாக செயல்படும். இங்கு சீசனையொட்டி நூற்றுக்கு மேற்பட்ட படுக்கைகள் அய்யப்ப பக்தர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
அதே போல் பத்தனம்திட்டா அரசு மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சையும் செய்யப்படும். நிலக்கல், பம்பையில் மருத்துவ ஆய்வு மையங்கள் 24 மணி நேரமும் செயல்படும்.
சன்னிதானம், பம்பை ஆகிய இடங்களில் அவசர இதய சிகிச்சை மையம் செயல்படும்.
பந்தளம், அடூர், பத்தனம்திட்டா, வடசேரிக்கரா ஆகிய இடங்களில் சிறப்பு மருந்தகங்கள் செயல்படும். ஓட்டல்கள், உணவகங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு சுகாதார அட்டை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM