Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சானூர், 16 நவம்பர் (ஹி.ச.)
திருப்பதியை அடுத்த திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் 9 நாட்கள் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடக்க உள்ளது.
அதையொட்டி நாளை (திங்கட்கிழமை) காலை தனுர் லக்னத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அதைத்தொடர்ந்து இரவு சிறிய சேஷ வாகன வீதிஉலா நடக்கிறது.
நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை பெரிய சேஷ வாகன வீதி உலா, இரவு ஹம்ச வாகன வீதி உலா, 19-ந்தேதி முத்துப்பந்தல் வாகன வீதி உலா, இரவு சிம்ம வாகன வீதி உலா, 20-ந்தேதி கல்ப விருட்ச வாகன வீதி உலா, இரவு அனுமந்த வாகன வீதி உலா, 21-ந்தேதி காலை பல்லக்கு உற்சவம், இரவு ‘சிகர’ நிகழ்ச்சியாக யானை வாகன வீதி உலா நடக்கிறது.
22-ந்தேதி காலை சர்வ பூபால வாகன வீதி உலா, மாலை தங்கத் தேரோட்டம், இரவு கருட வாகன வீதி உலா, 23-ந்தேதி காலை சூரிய பிரபை வாகன வீதி உலா, இரவு சந்திர பிரபை வாகன வீதி உலா, 24-ந்தேதி காலை தேரோட்டம், இரவு குதிரை வாகன வீதி உலா, 25-ந்தேதி காலை பஞ்சமி தீர்த்தம் (சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி), இரவு கொடியிறக்கம் நடக்கிறது. இதோடு வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.
வாகன சேவைகள் தினமும் காலை 8 மணியில் இருந்து 10 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரையிலும் நடக்கின்றன.
வாகனங்களில் உற்சவர் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
தொடர்ந்து 26-ந்தேதி புஷ்ப யாகம் நடக்கிறது.
Hindusthan Samachar / JANAKI RAM