Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 16 நவம்பர் (ஹி.ச.)
மதுரை ரயில் நிலையத்தில் நடைபெற்றுவரும் மறுசீரமைப்பு பணிகளை தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் விபின் குமார் ஆய்வு செய்தார். அவருடன் கோட்ட ரயில்வே மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா, கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் எல்.என். ராவ், கட்டுமானப் பிரிவு இணை முதன்மை பொறியாளர் கே. ஜி. ஞானசேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னதாக, ரயில்வே கட்டமைப்பு திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். மதுரை கோட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையின்போது, ரயில்வே துறை மக்களின் சேவைக்காக ஏற்படுத்தப்பட்டது. எனவே ரயில்வே கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்றும்போது அதிகாரிகள் தங்களை பயணிகளை போல பாவித்து திட்டங்களை வடிவமைக்க வேண்டும். அப்போதுதான் அவற்றை சிறப்பாக கட்டமைக்க இயலும், என்றார்.
மேலும், 'ரயில் மதாத்' செயலி மூலம் பயணிகளிடமிருந்து வரும் புகார்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ரயில்வே நலத்திட்டங்களை நிறைவேற்ற பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கான வருமானத்தை அதிகரிக்க முயற்சிக்க வேண்டும் எனவும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
கடந்த ஏழு மாதங்களில் மதுரைக் கோட்டம் 144 தினசரி ரயில்கள் மற்றும் 122 காலமுறை ரயில்களை இயக்கி மொத்தம் 29 மில்லியன் பயணிகளை கையாண்டுள்ளது. அதேபோல, இக்குறிப்பிட்ட காலகட்டத்திவ் சரக்கு போக்குவரத்தும் 10.11 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது.
இந்த ஆண்டின் இலக்கான 116 கி.மீ. ரயில் பாதைகள் பலப்படுத்துதல் பணியில் 73 கி.மீ. தூர பாதைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 68 கி.மீ. தூர ரயில் பாதைகள் இலக்கில் 48 கி.மீ. தூர வழித்தடங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன, என்றார்.
அத்துடன். பாதுகாப்பான ரயில் பயணத்திற்கு நான்கு ரயில் சாலை கடவுப் பாதைகள் சைகை முறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வேயில் முதன்முறையாக திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலி ரயில் பாதைகள் மின்சார பராமரிப்பு பணிமனை, மதுரை ரயில் பாதை மின்சார பராமரிப்பு கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றிற்கு ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் கிடைத்துள்ளது, என்ற மகிழ்ச்சிகரமான தகவலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பகிரப்பட்டது.
தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் விபின் குமார், மூன்று நாள் பயணமாக மதுரை கோட்டத்திற்கு வந்துள்ளார். வெள்ளிக்கிழமை அன்று ராமேஸ்வரம் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் மற்றும் பாம்பன் ரயில் தூக்குப் பாலம் ஆகியவற்றை அவர் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, மதுரை ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார். இன்று அவர், மதுரை - திருநெல்வேலி பாதையை ரயில் கண்ணாடி சுவர் வாயிலாக ஆய்வு செய்ய உள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN