Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 16 நவம்பர் (ஹி.ச.)
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 21-ந்தேதி முதல் டிசம்பர் மாதம் 7-ந்தேதி வரை நடைபெற உள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் வருகிற 3-ந்தேதி கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் ஏற்றப்பட உள்ளது.
அன்றைய தினம் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று மாவட்ட நிர்வாகத்தினால் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விழாவை முன்னிட்டு கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, திருவண்ணாமலைக்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்புக்காக கோவிலுக்குள், மாடவீதி மற்றும் கிரிவலப்பாதையில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் ஏற்கனவே நிரந்தரமாக 259 கண்காணிப்பு கேமராக்கள் உள்ள நிலையில் கூடுதலாக தற்காலிக கண்காணிப்பு கேமராக்கள் 572 எண்ணிக்கையில் பொருத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
Hindusthan Samachar / vidya.b