Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 நவம்பர் (ஹி.ச.)
தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி எஸ்.ஐ.ஆர். பணிகளில் முறைகேடு செய்வதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் விடியா தி.மு.க. ஸ்டாலின் மாடல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்கு மக்கள் தயாராகிவிட்ட நிலையில், தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டு வரும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளை(எஸ்.ஐ.ஆர்.) தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை தி.மு.க. ஒருபுறம் மேற்கொண்டு வருகிறது.
மறுபுறம் தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் இருப்பவர்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் என அனைவரும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளில், ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது சம்பந்தமாக கழகத்தின் சார்பில் தேர்தல் ஆணையத்திற்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் பல்வேறு புகார்கள் கொடுக்கப்பட்டும் உரிய நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை.
குறிப்பாக, சென்னை மாநகராட்சியில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளை மேற்கொள்வதற்காக களத்திற்கு வரும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள், பெரும்பாலும் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் அல்லாது வேறு நபர்களாகவே உள்ளனர்.
இதைப்பற்றி அதிகாரிகளிடம் கேட்டால், ஏற்கெனவே நியமிக்கப்பட்டு ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் பணியில் சேராத காரணத்தால் புதியவர்களை நியமித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் உங்களுடன் ஸ்டாலின் மற்றும் மக்களை தேடி மருத்துவம் பணிகளுக்காக தாற்காலிகமாகப் பணியாற்றி வரும் தன்னார்வலர்கள் என்ற பெயரில் தி.மு.க. நிர்வாகிகளால் நியமிக்கப்பட்ட தி.மு.க.வினரின் குடும்பத்தினர் மற்றும் அனுதாபிகளாகவே உள்ளனர்.
இவர்கள் தேர்தல் ஆணையத்தால் தெரிவித்துள்ளபடி வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை சந்தித்து படிவங்களை வழங்கும் பணியை செய்யாமல், அப்பகுதியில் உள்ள தி.மு.க. நிர்வாகிகள் அலுவலகத்திலோ அல்லது அவர்களது வீட்டு வாசலிலோ அமர்ந்து, அங்கு தி.மு.க.வினர் மற்றும் தி.மு.க. அனுதாபிகளை மட்டும் வரவழைத்து படிவங்களை அளித்து பூர்த்தி செய்ய வைத்து பெறுகின்றனர்.
இதன் காரணமாக, மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் படுக்கையில் இருப்பவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர இயலாத நிலையில், கணக்கெடுப்புப் படிவத்தை பதிய முடியாமல் தங்கள் வாக்குரிமையை இழக்கும் நிலை உருவாகும். மேலும், இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள், இரட்டை வாக்குப் பதிவு ஆகிய விபரங்களை வழங்கினாலும் அவர்கள் அதனை வாங்க மறுக்கின்றனர்.
தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, அதிகாரிகளின் துணையோடு தி.மு.க.வினர் மற்றும் அவர்களுக்கு வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு மட்டுமே படிவங்களை அளித்தும், மற்றவர்களை புறக்கணிக்கும் வேலைகளில் ஈடுபட்டும் வருகின்றனர். இது போன்ற மக்கள் விரோதச் செயல்களில் ஈடுபட்டு வரும் விடியா தி.மு.க. ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்நிலையில், சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளில், ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி தி.மு.க.வினரால் நிகழ்த்தப்படும் பல்வேறு முறைகேடுகளுக்குக் காரணமான விடியா தி.மு.க. ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைந்த சென்னை மாவட்டங்களின் சார்பில், 17.11.2025 - திங்கட் கிழமை காலை 10 மணியளவில், எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் வட சென்னை வடக்கு (கிழக்கு), வட சென்னை வடக்கு (மேற்கு), வட சென்னை தெற்கு (கிழக்கு), வட சென்னை தெற்கு (மேற்கு), தென் சென்னை வடக்கு (கிழக்கு), தென் சென்னை வடக்கு (மேற்கு), தென் சென்னை தெற்கு (கிழக்கு), தென் சென்னை தெற்கு (மேற்கு), சென்னை புறநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த, கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டங்களில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள்; மாநகராட்சி மாமன்ற இந்நாள், முன்னாள் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட கழக உடன்பிறப்புகள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / JANAKI RAM