Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 16 நவம்பர் (ஹி.ச.)
ராமநாதபுரம் மாவட்டம் அம்மா பூங்கா அருகே உள்ள சேதுபதி நகர் பகுதியில் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான சமூக நீதி விடுதிகள் செயல்பட்டு வருகிறது. அதன்படி பள்ளி மாணவர்களுக்கான விடுதியில் ஏராளமான மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விடுதியில் தங்கி 8ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர் ஒருவரை சக மாணவர்கள் சிலர் கண்மூடித்தனமாக கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் நடந்த போது விடுதியின் காப்பாளர் மற்றும் சமையலர் உள்ளிட்ட யாரும் அங்கு இல்லை எனவும் கூறப்படுகிறது. பள்ளி மாணவனை சக மாணவர்கள் எதற்காக தாக்கினார்கள் என்பது குறித்து இதுவரை முழுமையான தகவல் வெளிவரவில்லை எனவும் கூறப்படுகிறது.
அதோடு அந்த சம்பவத்தை வீடியோ பதிவும் செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இதனையடுத்து இது தொடர்பான காட்சிகள் பல்வேறு சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி மாணவவரை சக மாணவர்கள் தாக்கும் வீடியோவானது பார்ப்போரின் மனதை பதைபதைக்க வைக்கிறது. இதனையடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ராமநாதபுரம் ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 2 மாணவர்கள் விடுதியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அதே சமயம் விடுதியில் தங்கியிருக்கும் மற்ற மாணவர்களிடம் கல்வித்துறை அதிகாரிகள் நாளை (17.11.2025) விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN