பீகார் தேர்தலில் மக்கள் வாக்களித்து பாஜக கூட்டணி வெற்றி பெறவில்லை - செல்வப்பெருந்தகை
சென்னை, 16 நவம்பர் (ஹி.ச.) பீகார் வெற்றி என்பது மோடி - அமித் ஷா - ஞானேஷ் குமார் கூட்டணியினால் விளைந்ததே தவிர, மக்கள் வாக்களித்து பாஜக கூட்டணி வெற்றி பெறவில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பா
Selvaperunthagai


சென்னை, 16 நவம்பர் (ஹி.ச.)

பீகார் வெற்றி என்பது மோடி - அமித் ஷா - ஞானேஷ் குமார் கூட்டணியினால் விளைந்ததே தவிர, மக்கள் வாக்களித்து பாஜக கூட்டணி வெற்றி பெறவில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பீகார் மாநிலத்தைப் போல தமிழ்நாட்டிலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று சிலர் ஆரூடம் கூற ஆரம்பித்திருக்கிறார்கள். பீகார் மாநில தேர்தலை பொறுத்தவரை அங்கு வாக்காளர் பட்டியலில் நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்தத்தின் காரணமாக 65 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டதை எதிர்த்து மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அவர்களும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் அவர்களும் இணைந்து 16 நாட்கள் பீகார் மாநிலத்தில் வாகன அணிவகுப்பு மூலமாக பரப்புரை மேற்கொண்டார்கள்.

இந்த பின்னணியில் பீகார் மாநிலத்தில் தொகுதி பங்கீடு செய்யப்பட்டு தேஜஸ்வி யாதவ் அவர்களை முதலமைச்சராக இந்தியா கூட்டணி சார்பாக அறிவிக்கப்பட்டது.

தேர்தல் வெற்றி வாய்ப்புகள் நிச்சயமாக இந்தியா கூட்டணிக்கு சாதகமாக அமையும் என்று நாடே எதிர்பார்த்தது. ஆனால், தேர்தல் முடிவுகள் யாருமே எதிர்பார்க்காத வகையில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது.

கடந்த 2005 முதல் 20 ஆண்டுகளாக முதலமைச்சராக இருக்கிற நிதிஷ்குமார் மீண்டும் வெற்றி பெறுவதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லாத நிலையில் பா.ஜ.க. கூட்டணியின் வெற்றி எப்படி சாத்தியமாயிற்று என்று அரசியல் வல்லுநர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

பீகாரில் மொத்த மக்கள் தொகையில் 33.76 சதவிகிதம் பேர் வறுமை கோட்டிற்கு கீழே வாழ்ந்து வருகிறார்கள். பீகாரில் உள்ள குடும்பங்களில் 64 சதவிகிதம் பேர் மாதம் ரூபாய் பத்தாயிரத்திற்கும் குறைவாக வருவாய் பெற்றிருக்கிறார்கள்.

இந்தியாவிலேயே வேலையில்லா திண்டாட்டம் 10.8 சதவிகிதமாக பீகாரில் தலைவிரித்தாடி வருகிறது. ஏறத்தாழ 3 கோடி பேர் பீகாரில் இருந்து புலம் பெயர்ந்து தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் வேலை செய்து பிழைத்து வருகிறார்கள்.

இத்தகைய அவலநிலைக்கு பீகார் மாநிலத்தை கொண்டு சென்ற பா.ஜ.க. கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க எந்தவித நியாயமான காரணங்கள் இல்லை என்று உறுதியாக கூற முடியும். ஆனால் வெற்றி வாய்ப்ப எப்படி ஏற்பட்டது?

இந்திய தேர்தல் ஆணையர்கள் நியமனத்திற்காக அமைக்கப்பட்ட தேடுதல் குழுவில் இருந்து 2023 இல் இந்திய தலைமை நீதிபதியை நீக்கி விட்டு பிரதமர், மத்திய அமைச்சர், எதிர்கட்சித் தலைவர் என்று மாற்றியமைத்தார்களோ அன்றைக்கே இந்திய தேர்தல் ஆணையம் மோடி - அமித்ஷாவின் கூட்டணிக்குள் ஐக்கியமாகி விட்டது.

இந்த பின்னணியில் தான் கடந்த காலங்களில் வாக்குத் திருட்டு மூலமாக மகாராஷ்டிரா, அரியானா போன்ற மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. அத்தகைய உத்தியை தான் பீகாரிலும் பின்பற்றி வெற்றி பெற்றிருக்கிறார்கள். பீகார் வெற்றி என்பது மோடி-அமித்ஷா-கெய்னேஷ்குமார் கூட்டணியினால் விளைந்ததே தவிர, மக்கள் வாக்களித்து பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறவில்லை.

பீகார் சட்டமன்றத் தேர்தல் அக்டோபர் 6 ஆம் தேதி அறிவிப்பதற்கு முன்பாக செப்டம்பர் மாதத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது 1.21 கோடி பெண்களுக்கு தலா ரூபாய் 10,000 விநியோகம் செய்யப்பட்டது. இதை எதிர்த்து தேர்தல் ஆணையத்திடம் முறையிட்ட போது, அதனை தடுத்து நிறுத்த மறுத்து விட்டது.

ஆனால், தெலுங்கானா, ஜார்கண்ட் மாநிலத்தில் இத்தகைய திட்டங்களை தேர்தல் ஆணையம் அனுமதிக்கவில்லை. பெண்களுக்கு வழங்கப்பட்ட ரூபாய் 10,000 வாக்குகளுக்காக கொடுக்கப்பட்டது லஞ்ச பணமாகத் தான் கருத வேண்டும். இது வெற்றிக்கான மிக முக்கிய காரணமாகும்.

நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் 20.6 சதவிகித வாக்குகளை பெற்று 89 இடங்களில் பா.ஜ.க.வும், 20.3 சதவிகித வாக்குகளை பெற்று 85 இடங்களில் ஐக்கிய ஜனதா தளமும் வெற்றி பெற்றது. ஆனால், 23 சதவிகித வாக்குகளை பெற்ற ராஷ்டிரிய ஜனதா தளம் 25 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

இன்றைக்கும் தனிப்பெரும் கட்சியாக ராஷ்டிரிய ஜனதா தளம் விளங்கினாலும் 2020 சட்டமன்றத் தேர்தலில் 15.39 சதவிகித வாக்குகளை பெற்று 43 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த ஐக்கிய ஜனதா தளம் தற்போது 85 இடங்களில் எப்படி வெற்றி பெற முடிந்தது என்பது கடுமையான சந்தேகத்திற்கு உரியதாகும். இதில் தேர்தல் ஆணையத்தின் சதி இருப்பதை அனைவரும் உறுதி செய்கிறார்கள்.

தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கடந்த 2019 மக்களவை தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், 2024 மக்களவை தேர்தல் ஆகியவற்றில் அமோக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை மதச்சார்பின்மை, சமூகநீதி ஆகிய கொள்கைகளுக்காகவும், தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்கிற நோக்கத்திலும் இந்தியா கூட்டணி வெற்றிக் கூட்டணியயாக செயல்பட்டு வருகிறது. ஒன்றிய பா.ஜ.க. அரசின் தமிழக விரோத போக்கிற்கு எதிராக மக்கள் ஓரணியில் திரண்டு இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக அணிவகுத்து நிற்கிறார்கள்.

எக்கு கோட்டை போல இருக்கிற இந்தியா கூட்டணிக்கு எதிரான வாக்குகளை அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி, தமிழக வெற்றி கழகம், நாம் தமிழர் கட்சி பங்கு போட்டுக் கொள்கிற சூழல் தான் 2026 சட்டமன்றத் தேர்தலில் இருக்கப் போகிறது.

இதன் அடிப்படையில் இந்தியா கூட்டணி தமிழகத்தில் மீண்டும் வெற்றி பெற்று நல்லாட்சி அமைவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN