Enter your Email Address to subscribe to our newsletters

வேலூர், 16 நவம்பர் (ஹி.ச.)
வேலூரில் திமுக மாமன்ற உறுப்பினர் இல்லத்தில் வைத்து SIR படிவங்கள் பூர்த்தி செய்யப்படுவதாக அதிமுகவினர் எழுப்பியுள்ள குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் (SIR-Special Intersive Revision) கடந்த 4-ஆம் தேதி தொடங்கி தற்போது முழுமூச்சில் நடைபெற்று வருகிறது. வருகின்ற டிசம்பர் 4-ஆம் தேதியுடன் இந்த பணிகள் முடிவடைய உள்ளதால், அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் அலுவலர்கள் வீடு, வீடாக சென்று படிவங்களை கொடுத்து, வாக்காளர்கள் விவரங்களை பூர்த்தி செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், வேலூரில் திமுக மாமன்ற உறுப்பினர் இல்லத்தில் வைத்து SIR படிவங்கள் பூர்த்தி செய்யப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாநகராட்சியின் 43-வது வார்டில் உள்ள 99, 100, 101, 102 ஆகிய வாக்குச்சாவடிகளுக்கான BLO அதிகாரிகள், அந்த வார்டின் திமுக மாமன்ற உறுப்பினர் ஆயூப்கான் இல்லத்தில் அமர்ந்து, SIR விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த அதிமுக வேலூர் மாநகர மாவட்ட கழக செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வீடு வீடாகச் சென்று நேரடியாக வாக்காளர்களிடம் இருந்து திரும்பப் பெறாமல், ஒரே இடத்தில் திரட்டுவது தேர்தல் ஆணைய விதிகளுக்கு எதிரானது எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், வாக்காளர் பட்டியலில் மீண்டும் குளறுபடிகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அவரது குற்றச்சாட்டுக்கு BLO -க்கள் எந்த பதிலும் கூறாமல் இருந்தனர். இதனால் அதிமுகவினர் மற்றும் திமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக எஸ்.ஆர்.கே. அப்பு, வேலூர் மாநகராட்சி மண்டல துணை ஆணையாளரிடம் (Zonal Deputy Commissioner) புகார் தெரிவித்தார். புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த துணை ஆணையாளர், பி.எல்.ஓ.க்கள் விதிமுறைகளை மீறி ஒரே இடத்தில் படிவங்களை பூர்த்தி செய்தது தவறு என்பதை உறுதிப்படுத்தினார்.
மேலும் இதில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
அத்துடன், ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தனித்தனியாக BLO-க்கள் நியமிக்கப்பட்டு, வாக்காளர்களிடம் இருந்து படிவங்கள் நேரடியாக பெற வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார்.
இதுபோன்ற, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் தொடர்பான குளறுபடிகள் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் நடைபெறுவதாக தாங்கள் புகார் அளித்தும், இதே நிலை நீடித்து வருவதாக அதிமுகவினர் குற்றம்சாட்டுகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN