Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 நவம்பர் (ஹி.ச.)
சென்னை மாநகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998, விதிகள் 2023, பிரிவு 292ன்படி சென்னை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் செல்லப்பிராணிகள் வளர்ப்பதற்கான உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் செல்லப்பிராணிகள் வளர்ப்பினை முறைப்படுத்த கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் முதல் சென்னை மாநகராட்சி இணையதளம் வாயிலாக செல்லப்பிராணி உரிமம் பெறும் முறை நடைமுறையில் உள்ளது.
அதன்படி மாநகராட்சி கால்நடைத்துறை அதிகாரிகளும், மருத்துவ பணியாளர்களும் வீதி, வீதியாக சென்று தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தி வருகிறார்கள்.
சென்னை மாநகராட்சியில் இதுவரை 1 லட்சத்து 22 ஆயிரத்து 625 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 5 ஆயிரத்து 483 வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
செல்லப்பிராணிகளுக்காக உள்ள 6 சிகிச்சை மையங்களில் தினமும் காலை 8 மணி முதல் 3 மணி வரையில் உரிமம் வழங்குதல், மைக்ரோசிப் செலுத்துதல், ரேபிஸ் தடுப்பூசி செலுத்துதல் ஆகிய பணிகள் நடைபெறுகிறது.
சென்னையில் இன்றும் (நவ 16), 23-ந்தேதியும் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறும். மைக்ரோ சிப் பொருத்தும் பணி மற்றும் வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி செலுத்தும் பணி சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் திரு.வி.க. நகர், புளியந்தோப்பு, லாயிட்ஸ்காலனி, நுங்கம்பாக்கம், கண்ணம்மாப்பேட்டை, மீனம்பாக்கம் செல்லப்பிராணிகள் சிகிச்சை மையங்களிலும், சோழிங்கநல்லூர் நாய் இனக்கட்டுபாட்டு மையத்திலும், என மொத்தம் 7 மையங்களில் நடைபெறுகின்றன.
டிசம்பர் மாத இறுதிக்குள் அனைத்து தெரு நாய்களுக்கும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்படும். 24-ந்தேதிக்குள் செல்லப்பிராணிகளுக்கு மைக்ரோசிப் பொருத்தி, உரிமம் பெறாத உரிமையாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / vidya.b