Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 நவம்பர் (ஹி.ச.)
பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற அடிப்படையில், அதற்கான தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஆகஸ்டு மாதம் வெளியிடப்பட்டது.
இதனை தொடர்ந்து ஆசிரியர் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு தாள்-1 நேற்று (நவ 15) 367 மையங்களில் நடைபெற்றது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தேர்வு நடைபெற்றதால், அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
நேற்றைய தேர்வில் தமிழ்நாடு முழுவதும் 92,412 பேர் தேர்வு எழுதினர்.14 ஆயிரத்து 958 பேர் தேர்வு எழுத வரவில்லை என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வான டெட் 2-ம் தாள் தேர்வு இன்று (நவ 16) நடைபெற்று வருகிறது. பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வினை 1,241 மையங்களில் 3.73 லட்சம் தேர்வர்கள் எழுதி வருகின்றனர்.
தேர்வில் முறைகேட்டை தடுக்கும் பொருட்டு பறக்கும் படையினர் தேர்வறையை கண்காணித்து வருகின்றனர். மேலும் தேர்வு பாதுகாப்பு பணியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
அனைத்து தேர்வு மையங்களிலும் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மேற் கொள்ளப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b